மீண்டும் மாடி ஏறுவதா? வேண்டவே வேண்டாம். தப்பித்து ஓடி விடுவோம். "தமிழ்… கொஞ்சம் மேல வாங்க. ப்ளீஸ்." ஐயோ கூப்பிடுறானே....!!! என்ன பண்ணுறது?. யோசித்தேன். டைனிங் டேபிள் மேல் கனமான வெண்கல ஜாடி ஒன்றில் பூங்கொத்து வைத்திருப்பேன். அதை எடுத்து எனக்கு பின்னால் ஒளித்து பிடித்தேன். அது ஒல்லியான நீள ஜாடி. அதனால் எளிதாக மறைக்க முடிந்தது. படியேறி மேலே சென்றேன். அலமாரி சாய்ந்து அவன் மீது விழுந்திருந்தது. தாங்கி பிடித்தபடி, போராடிக் கொண்டிருந்தான். ஜாடியை அவனுக்கு தெரியாமல் அறை வாசலில் வைத்துவிட்டு ஓடினேன். "இது எப்படி நடந்துச்சு.? எப்படி மேல விழுந்துச்சு? ." "கேள்வி கேட்குற நேரமா இது அப்புறம் சொல்றேன். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. முடியல." இருவரும் சேர்ந்து அந்த இரும்பு அலமாரியை தூக்கி நிறுத்தினோம். அதிலிருந்த எல்லாமே கீழே சிதறிக்கிடந்தது. அவன் அலமாரியின் கால்களுக்கு ஒரு கட்டையை வைத்து நிலை கொடுத்தான். நான் விழுந்து கிடந்த துணிகளையும், பைல்களையும் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தேன். "அம்மாக்கு அவங்க அப்பா வாங்கி கொடுத்த பீரோவாம். சென்டிமென்டா வச்சிருக்காங்க. மாத்திடுவோம்னு சொன்னாலும் கேட்கல. சும்மா பைல்ஸ் அது இதுன்னு வச்சு யூஸ் பண்ணிட்டு இருக்கோம். வீட்டுக்கு கொண்டு வரும் போது ஒரு கால் டேமேஜ் ஆகிருச்சு. பைல் வைக்க வந்தப்போ கால் அடவு கொடுத்திருந்த கட்டையில தட்டிருச்சு. பீரோ என் தலைமேல் விழுந்திடுச்சு" சாதாரணமாக இருந்திருந்தால் இப்போது விழுந்து விழுந்து சிரித்திருப்பேன். இப்போது குழப்பமாக இருக்கிறது. டைரி உண்மையை சொல்கிறதா? இல்லை இவன் நடிக்கிறானா? " தமிழ் நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வறேன். டின்னர்க்கு வெளியவே சாப்பிட்டுக்கிறேன். நீங்களும் சாப்பிட்டு தூங்குங்க. கதவை மட்டும் மறுபடியும் லாக் பண்ணிடாதீங்க." அவன் உடை மாற்றி, அரை மணி நேரத்தில் புறப்பட்டு விட்டான். கனவை பரிசீலிப்பதற்கான நேரமிது. வீட்டின் கதவு சாத்தப்பட்ட சத்தம் கேட்டதும் அவன் அறைக்குள் நுழைந்தேன். அறைக்குள்ளிருக்கும் உள் அறையை திறந்தேன். அவன் வாசம் பொருந்திய சட்டைகள் அடுக்கடுக்காய் தொங்கிக் கொண்டிருந்தது. சட்டைகளை விலக்கினேன். அதற்கு பின்னால் கதவு எதுவுமில்லை. முழுவதுமாக தேடிப் பார்த்துவிட்டேன். சுவரை தவிர வேறு எதுவுமில்லை. வீட்டை சுற்றி தேடிப் பார்ப்போம் என்று தோன்றியது. ஒவ்வொரு அறையாக திறந்தேன். எல்லாமே காலியாக இருந்தது. எனது அறைக்கு பக்கத்து அறை மட்டும் பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையில் என்ன இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டில் பல அறைகள் காலியாக இருப்பது விசித்திரமாகவே இருக்கிறது. மெதுவாக தாத்தாவிடம் இதை பற்றி பேச்சுக் கொடுக்க நினைத்தேன். ஒரு கப் காஃபியோடு அவர் பக்கத்தில் அமர்ந்தேன். "என்னம்மா இந்த கருக்கல் நேரம் இங்க வந்து உட்கார்ந்திருக்க. கொசு கடிக்கும்மா. உள்ள போ." "இல்ல தாத்தா போரடிக்குது. உங்ககிட்ட பேசிட்டு இருக்கலாம்னு வந்தேன்." "போரடிக்குதாம்மா… அந்த காலத்துல நான் பட்டாளத்துல இருந்த நேரத்துல…" "தாத்தா…. நூறு தடவைக்கு மேல இந்த கதைய சொல்லிட்டீங்க. பார்த்திபன பத்தி ஏதாவது சொல்லுங்களேன். " " ஆஹா…. என்னடா இன்னும் ஆரம்பிக்கலயேன்னு பார்த்தேன். உனக்கு சொல்லாம யாருக்கு சொல்ல போறேன்.. நல்லா கேட்டுக்க… "
தினம் ஒரு கலக்கல்ஸ்