தினம் ஒரு கலக்கல்ஸ்

அந்த அருவா - பாகம் - 2

கொளுந்து விட்டு எரியும் தீப்பந்தத்தை கன்னத்தின் அருகில் கொண்டு வந்தார் போல் அப்படி வெப்பத்தைக் கக்கிக் கொண்டு மேகத்தைப் பிளந்து வெளியே வந்தான் சூரியன்.  

கீழேக் கிடந்த மண்ணை அள்ளி அரிவாளைத் தீட்டியவர், தன்னுடைய வலது கையின் கட்டை விரலால் கூர்மையைச் சரிபார்த்தார்.

இரத்தம் மட்டும்தான் வரவில்லை. விரலின் மேல் சதையை அப்படியே பதம் பார்த்திருந்தது. 

‘நொப்பனோலி, ச்சை… அறுத்து விட்டுருச்சு’ முகத்தை அப்படி சுளித்துக் கொண்டு கட்டை விரலை தன்னுடைய வாயில் வைத்து சப்பிக் கொண்டிருந்தார் வேலு.

‘என்ன வேலு சின்னபுள்ள மாதிரி வெரல இப்படிச் சப்பிக்கிட்டு இருக்க?’ பக்கத்து வீட்டு கணேசன் சிரித்துக் கொண்டே கேட்டார்.

வாயில் இருந்த விரலை எடுத்து, தான் உடுத்தியிருந்தக் கைலியில் துடைத்துக் கொண்டு ‘அருவா பளபளன்னு இருக்கான்னு பாத்தேன். பொசுக்குன்னு தன்னோட வேலயக் காட்டிருச்சுப்பா’

‘என்னப்பா சொல்ற வேலு?’ ஆச்சர்யத்தோடு கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்தார் கணேசன்.

‘ஆமாப்பா, பொய்யா சொல்றேன். இந்தாப் பாரு’ தன்னுடைய விரலைக் காட்டினார்.

‘நல்லா பளம்மா சீவிருக்கேப்பா’ கணேசன் ஆதங்கத்தோடு சொன்னார். பக்கத்தில் கிடந்த பழையத் துணியைக் கிழித்து கட்டை விரலில் கட்டிக்கொண்டார்.

‘இன்னக்கி எந்தப் பக்கம்’ கணேசன் கேட்டார்.

‘நம்ம கந்தசாமி, வேந்தர் மலைக்கு மரம் வெட்டனும்னு சொன்னா அத அருவாவ தீட்டிக்கிட்டு இருக்கேன்’

‘என்னது வேந்தர் மலைக்கா? ஏப்பா அங்கதான் போலீஸ் நடமாட்டம் அதிகமா இருக்குன்னு சொன்னாவலே?’

‘இருக்குத்தான். கந்தசாமி என்னவோ ஏற்கெனவே கொளத்தூர் ஏட்டுக்கிட்டே பேசிட்டானா’

‘பேசிட்டானா? வெட்டிக்கன்னா சொன்னாராம்?’

‘அதெல்லாம் நமக்குத் தெரியலப்பா. இன்னக்கி அந்தப் பக்கம் போலீசெல்லாம் வராதுன்னு சொன்னான்’

‘அப்ப இன்னக்கி கொண்டுபோர அருவா திரும்பி வந்துரும்னு சொல்ற’

‘ஆமா... ஆமா…’

‘பாத்துப்பா, அப்படித்தான் சொல்லுவாக அப்புறம் திடுதிடுப்புனு வந்து நிப்பாக. ஏற்கெனவே போலீஸ் ஸ்டேசன்ல ஒரு ரூமே அருவாவா நெறஞ்சுக் கெடக்காம். ஒன்னோட அருவாவும் அங்கப் போயி இத்துப்போயிராமப் பாத்துக்கோ’

‘அதெல்லாம் போவாதுப்பா. நீ ஓன் வாயக் கொஞ்சம் வச்சுக்கிட்டு சும்மா இரு’ வேலு கடுப்போடு சொல்லிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு எழுந்தார். அன்று அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் மிகவும் உக்கிரமாக இருந்தது. சில ஊர்களில் கோடைமழை கொட்டினாலும் பல மாவட்டங்களில் வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. 

ஊர் தெருவின் பாதியில் நின்றுக் கொண்டு தன்னுடைய சைக்கிள் பெல்லை அடித்து ‘வேலு போவலாமா’ சைகையில் கேட்டார் கந்தசாமி.

‘போவலாம் போவலாம்’ என தன்னுடைய துண்டைக் காண்பித்து விசிறினார். 
‘வா போவலாம்’ எனக் கை அசைக்க ‘வர்றேன் பொறு’ என கை அசைவில் சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் சென்றார் வேலு.

வேலுவின் மனைவி, காமாட்சி சோத்துப்பானை தண்ணீரில் உப்புபோட்டுக் கொடுக்க, ஒரு சொம்பு நீராதாரத்தைக் குடித்து பெரிய ஏப்பத்தைப் போட்டார் வேலு.

கையோடு ஒரு தூக்குவாளியில் பழையக் கஞ்சியைக் கொடுத்தாள் காமாட்சி. 

‘வாரேன்டி’ சொல்லிக்கொண்டே அரிவாளை வலது கையிலும் தூக்குவாளியை இடது கையிலும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

‘சைக்கிள எடுத்துட்டுப் போவல?’ காமாட்சி கேட்டாள்.

‘இல்ல இல்ல… அவனோடப் போறேன்’

‘யாரோட’

‘கந்தசாமியோட’

‘வந்துட்டாவலா’

‘வந்துட்டான் வந்துட்டான். அந்தா முருகன் வூட்டு சந்துல நிக்குறான்’

‘அவுக சைக்கிள்லயாப் போறீய?’

‘ஆமா ஆமா’

‘சரி சரி பாத்துப் போயிட்டு வாங்க’

‘ம்ம்…சரி சரி… நீ மாடுகளுக்கு நேரத்துக் தண்ணி வக்க மறந்துடாத’

‘ம்…ம்… மறக்க மாட்டேன்… நீங்க பாத்து போயிட்டு வாங்க’

ஒரு கிலோ சிக்கனை திறந்தவெளியில் தக தகவென கொதிக்கும் எண்ணையில் வறுத்தார் போல் சூரியன் அப்படி நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தது.

தொடரும்...

முந்தைய பகுதியை வாசிக்க.…

https://kalakkaldreams.com/post/That-Arua---Part---1/47