தினம் ஒரு கலக்கல்ஸ்

அவன் ஒரு சுழல் - பாகம் 30

அவன் என் தோளை தொட்டு பிடித்து மெல்ல நகர்த்தினான். அவன் கண்களில் இருந்த கோபம் என்னை பயமுறுத்தியது. என்ன செய்வேன் மனம் பதறிக் கொண்டிருந்தது. அவனை நோக்கி கோபமாக கத்த வாய் திறந்த போது, அவன் என்னை இழுத்து வேறு பக்கமாக நிறுத்திவிட்டு, அங்கிருந்த இன்செக்ட் கில்லர் ஸ்ப்ரே எடுத்து, எட்டு கால்கள் கொண்ட ராஜாவை போல் உடலின் மீது கண்கள் போன்று பழுப்பு வண்ணம் வரையப்பட்டு, சுவரில் கம்பீரமாய் அமர்ந்திருந்த ஒரு கை அளவு பெரிய ஒரு சிலந்தியின் மீது தெளித்தான். அது வேதனையிலோ எரிச்சலிலோ அங்கு இங்கென்று சுற்றி என் கைகளின் மீது துள்ளி விழுந்தது. எனக்கோ சிலந்திகள் என்றாலே ரொம்ப பயம். அதன் கால்களில் சுவற்றை பற்றி பிடிக்க ஏதுவாய் இருக்கும் ரோமங்கள் என் கைகளில் பற்றி பிடித்தபோது ரோஜா செடிகளுக்கு நடுவில் கைமாட்டிக்கொண்டது போல நர நரவென்று குத்த பயத்தில் கைகளை உதறி பதறியடித்து பார்த்திபனின் தோள் பற்றி அவனுக்கு பின்னால் ஒளித்து நின்றேன். சில நிமிடங்களுக்கு முன்னால் அவனிடமிருந்து பாதுகாப்பு தேடி, இப்போது அவனின் பாதுகாப்பில் ஒளிந்து நிற்கிறேன். அவன் மீண்டும் அந்த சிலந்தியின் மீது மருந்து தெளிக்க அது தன் கால்களை உள்பக்கமாக சுருட்டிக் கொண்டு மூர்ச்சையானது. அவன் அதை தூக்கி வீட்டுக்கு வெளியில் கொண்டு போட்டான். அந்த சில நிமிட இடைவெளியில் எனக்கு தோன்றியதெல்லாம், சந்தேகம் எப்படிப்பட்ட மாயை, அவன் எதை செய்தாலும் என்னை தாக்குவதற்காக செய்வதாகவே தோன்ற வைக்கிறது. ஒரு வேளை அவன் நல்லவனாய் இருந்தால், அவனை சந்தேகப்பட்ட இந்த மனதின் குற்ற உணர்ச்சியை எங்கு போய் தீர்ப்பேன்….. இருவரும் அவரவர் அறைக்குள் தூங்குவதற்காக நுழைந்தோம். எனக்கு தான் வரவேயில்லை. புரண்டு புரண்டு படுத்த படி இனி வேலைக்காகாது என்று எழுந்து அமர்ந்தேன். மறைத்து வைத்திருந்த டையரியை எடுத்து மீண்டும் படங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். எதுவுமே தோன்றவில்லை. நான் என்ன ஜேம்ஸ் பாண்டா இந்த கேஸில் பார்த்திபன் குற்றவாளியா இல்லையா என்று டையரியில் க்ளூ கண்டுபிடிக்க. ஜேம்ஸ் பாண்ட் படம் ஒன்று கூட பார்த்ததில்லை, துப்பறிவாளன் என்ற பெயருக்கே படம் பார்க்காமல் சேனல் மாற்றிய நியாபகம். முதல் முதலாக புத்தக கண்காட்சியில் வாங்கிய ஷெர்லாக் ஹோம் புத்தகத்தை அடிக்கடி தூசி தட்டி வைப்பேனே தவிர இதுவரை ஒரு பக்கம் கூட வாசித்ததில்லை. இப்படி இருக்கும் போது என்ன ஐடியா தான் கிடைக்கும். ஆனாலும் என் ஆறாவது அறிவு கொஞ்சம் வேலை செய்தது. என்னுடைய புகைப்படம் இருந்த பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்… சட்டென்று பொறி தட்டியது. அந்த புகைப்படம் இருந்த தேதியில் தான் நான் தற்கொலைக்கு முயன்றிருந்தேன். அந்த நாளை நான் எப்படி மறப்பேன். வெகு நாட்களாய் நான் காத்திருந்த நாள் தானே அது. சிவா அன்று தான் வீட்டிற்கு அவன் பெற்றோரோடு வீட்டிற்கு என்னை பெண் பார்க்க வருவதாய் சொல்லி இருந்தான். ம்ம்ம் சிவாவும் நானும் இரண்டு வருடங்களாக காதலித்தோம். வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அவன் தான் எனக்கு முதல் அறிமுகம். ஐடி துறையில் வேலை கிடைத்து கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்திருந்த எனக்கு அவன் வீடு தேடுவதிலிருந்து, இடங்களை சுற்றிக்காட்ட என எல்லா உதவியும் செய்தான். ஆகஸ்ட் இருப்பத்தி இரண்டாம் நாள் நடந்ததெல்லாம் எனக்கு இப்போது என் கண்முன் சினிமா காட்சிகளாக தெரிகிறது. நானும் சிவாவும் ஆபிஸ் கேன்டினில் டீ குடித்துக் கொண்டிருக்கிறோம். "தமிழ் எத்தன நாள் இப்படியே தனியா இருக்க போற. லெட்ஸ் கெட் மேரிட்." "நான் எப்போ கல்யாணம் பண்ணிக்குவோம்னு சொன்னாலும் கனவு, லட்சியம், லோன், பாங்க் பேலன்ஸ்னு கத சொல்லுவ. இன்னிக்கு என்ன சிவா திடீர்னு நீயே இதெல்லாம் பேசுற." "நான் சீரியசா பேசிட்டு இருக்கேன். நீ என்னை கிண்டல் பண்றியா? " "ஹே அதெல்லாம் இல்ல. என் சைட் இத பத்தி பேச யாருமே இல்ல. உனக்கே தெரியும். உங்க வீட்ல அப்பாக்கு இந்த லவ்ல எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லைன்னு சொல்லுவியே. இப்போ அப்பாவ கன்வைன்ஸ் பண்ணிட்டியா இல்ல அப்பா மேல பயம் போச்சா? " " தமிழ்…! டென்சன் பண்ணாத உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க இஷ்டமா இல்லையா? " " லூசு. எதுக்கு இப்போ கத்துற. கல்யாணம் பண்ணிக்க தானே லவ் பண்றோம். அப்பாவ எப்படி கன்வைன்ஸ் பண்ணினன்னு கேட்டேன். " " அதெல்லாம் கன்வைன்ஸ் பண்ணிட்டேன். டே ஆப்டர் அப்பா அம்மாவோட வீட்டுக்கு வந்து உன்ன பொண்ணு கேட்குறேன். நல்ல அழகா ட்ரெஸ் பண்ணிட்டு ரெடியா இரு. " " எதுக்குடா இந்த பார்மாலிட்டீஸ்லாம். நான் மட்டும் தனியா இருக்கிற வீட்டுக்கு வரணுமா? வெளிய காஃபி சாப்ல எங்கையாவது மீட் பண்ணலாமே. எனக்கு எம்பாரஸிங்கா இருக்கு. " " அடியேய் தமிழ். தமிழ்நாட்டு பொண்ணு தானே நீ. பொண்ணு பார்க்க வாறது, அப்படியே வெட்கப்பட்டு காஃபி கொடுக்கிறது இந்த மாதிரி ஆசை எல்லாம் உனக்கு இல்லையா? இப்படி கேட்குற? " " ஆசையெல்லாம் இருந்துச்சு சிவா. அப்பா அம்மா இருந்திருந்தா எங்க ஊருக்கே உங்கள வர வச்சு மேள தாளத்தோட செமையா பண்ணிருக்கலாம். " " தமிழ் நீ அதை பத்தி எல்லாம் நினைச்சு ப்யூச்சர்ல ஃபீல் பண்ண கூடாதுன்னு தான் இந்த ஏற்பாடே. " அடுத்த நாள் என் நெருங்கிய தோழி ஸ்வப்னாவை மட்டும் துணைக்கு அழைத்து கொண்டு, விருந்து செய்வதற்காக ஷாப்பிங் போய் ஆசை ஆசையாய் எல்லாம் வாங்கி வந்தோம். ஆகஸ்ட் இருப்பத்தி நான்கு, இன்று தான் சிவா பெண் கேட்டு வருகிறான். அவன் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் நிச்சயமாக போகிறது. ஆனாலும் மனதிற்குள் ஏதோ நெருடல். அதனாலேயே ஊரிலிருக்கும் அத்தை, மாமாவிற்கு எதுவும் போன் செய்து தெரிவிக்கவில்லை. என்னை பற்றி அதிகம் அக்கரை இல்லாதவர்கள் என்றாலும், இதெல்லாம் சொல்லாமல் எப்படி இருக்க முடியும். சிவா வந்து போன பிறகு பேசலாம் என்று நினைத்தேன். மதிய சாப்பாட்டை நானும் ஸ்வேதாவுமாக செய்து முடித்தோம். கொஞ்சம் கொஞ்சம் அம்மாவோடு சமைத்த ஞாபகமும், சந்தேகங்களுக்கு ஸ்வேதா அம்மாவுக்கு போன் செய்தும், சிலதை யூடூப் ரெசிபி உதவியோடு ஒரு வழியாக சமைத்து மேசை மீது அடுக்கிவிட்டு ஆடை அலங்காரம் செய்து கொண்டு சிவாவிற்காக காத்திருந்தேன்.