இலக்கியம்

தடம்

மதியம் 2.40மணி இருக்கும், "சொல்லு மக்கா எங்கடே இருக்க?" என்றான் நண்பன். எங்கு இருக்கிறேன் என்பதை சொல்லிவிடுவேன் அதன் பின் அவன் கேட்கபோகும் கேள்விகளுக்கு தான் என்னிடம் பதில்கள் இல்லை. மனதில் தைரியத்தை வர வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன். "மக்கா...... மதுரை தாண்டிட்டேன். சிவகாசி கடைதெரு அண்ணாச்சி ஒருத்தர் காய் லோடு வண்டில இப்போம்தாம்லே பழனி வந்திருக்கேன்” என்று சொன்னேன். ”மக்கா.... எப்போம்லே ஊரு பக்கம் வருவ? உன்னை பார்த்தே எட்டு மாசம் ஆச்சுலே. அம்மையும் அக்காவையும் பார்க்க வேணாம். என்னைய பார்க்கவாச்சும் ஊரு பக்கம் வாம்லே” என்றான். தீபாவளி முன்பே வீட்டை விட்டு வெளியே வந்தது. அப்போது தான் எனக்கும் நினைவுக்கு வந்தது. ஆம் பாசமெல்லாம் பொய். காசு இல்லை என்றால் யாருக்கும் நாம் தேவைப்படமாட்டோம் என இத்தனை வருட வாழ்க்கை சொல்லிக் கொடுத்துள்ளது. அப்பா சிறையில் அடைக்கப்படும் வரை குடும்பம் நல்ல நிலையில் தான் இருந்தது. குடிபோதையில் யாரோ கூட்டாளிகள் அழைக்க, பக்கத்து ஊர் கவுன்சிலரை வெட்டிய வழக்கில் சிறை சென்று இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகிறது. தம்பிக்கு ரேசன் கடையில் வேலை கிடைத்த பின், நான் படித்த இன்ஜினியரிங் எனக்கு கை கொடுக்கவில்லை. டவுனில் சத்தியம் டியூசன் சென்டரில் ஒரு வருடம் ஆசிரியராக இருந்தேன். ஏழாயிரம் மட்டுமே சம்பளம் கொடுத்தார்கள். படிக்க வாங்கிய கடனை அடைக்க சொல்லி எப்போதும் வீட்டில் சண்டை. என்னை படிக்க வைத்ததால் தான் குடும்பம் கடனில் மூழ்கியது என எல்லாரும் நம்பினார்கள். தினமும் சாப்பிடும் போது அம்மா பேசும் ஜாடை பேச்சுகளை கடந்து மென்று முழுங்குவது அவ்வளவு கடினமாக இருந்தது. போதும்.... இனியும் இதை பொறுத்துக் கொள்ள முடியாது என காலண்டர் கம்பெனியில் வேலை செய்யும் மகாலிங்கத்திடம் போனில் பேசினேன். “கிளம்பி வா” என்றான். அடுத்த நாள் காலையிலே அவனை பார்க்க சிவகாசி சென்றடைந்தேன். எல்லோரும் நம்மை பாரமாக நினைக்கும் காலங்களில் சில நண்பர்கள் மட்டும் அப்படி நினைப்பதில்லை என நினைத்துக் கொண்டேன். புதுவருடம் பிறக்கும் சமயத்தில் வேலையில் சேர்ந்ததால் இந்த காலண்டர் வேலையை சீக்கிரமா கற்றுக்கொண்டேன். நான் இங்கு வந்த சில நாட்களில் மாகலிங்கம் ஹோட்டலில் வேலை கிடைத்துவிட்டதென மொரிசியஸ் சென்று விட்டான். கம்பெனி ஓனர் என்னை அங்கேயே தங்க அனுமதித்தார். முதல் மாத சம்பளத்தில் ஆறாயிரம் அம்மாவுக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த மாதத்திலிருந்து எட்டாயிரம் அனுப்பி வைக்க தொடங்கினேன். புது வருடத்ததையும் கம்பெனியிலே கழித்தேன். பொங்கலுக்கு ஊருக்கு வரச்சொல்லி அழைப்பு வரும் என காத்திருந்தேன். அப்படி எதுவம் வரவில்லை. கோவில்பட்டி சிறையில் உள்ள அப்பா மட்டும் இடையில் ஒருமுறை சந்தித்து விட்டு வந்தேன். “சாதிசனம் உங்கள பாத்துக்கும்னு நம்பிக்கைல தான் இப்படி ஒரு தப்பு பண்ணிட்டேன்டே. அப்பன மன்னிச்சிடு” என்று இயலாமையில் புலம்பினார். ஆம்... கண்களை அப்போது சில கண்ணீர் துளிகள் சூழ்ந்திருந்தன. உடலில் நடுக்கமும் அவ்வப்போது வந்து போனது. நண்பர்கள் என யாரும் இல்லை பக்கத்து கம்பெனியில் உள்ள வாட்ச்மேன் ஐயா மட்டும் அவ்வப்போது பேசுவார். சண்முகம் அண்ணாச்சி டீக்கடையில் நோய் நோய் பல நாட்களாக பேசிக்கொண்டு இருந்ததை கவனித்து வந்தேன். திடீரென ஒருநாள் கடையடைப்பு என செய்தி வந்தது. அடுத்த நாள் சண்முக அண்ணாச்சி, ”நீ ஊருக்கு போகலையா?” என கேட்டார். “இல்ல அண்ணாச்சி. விசேசம் ஒன்னு இல்ல. அதான் புறவு போலாம்னு இருக்கேன்” என்றேன். ”எல்லா பக்கமும் நோய் வருதாம். கம்பெனில சொல்லிட்டு ஊரு பக்கம் போய் சேருடா” என அண்ணாச்சி சொன்னார். வீட்டுக்கு போக விருப்பமில்லை என்பதால் அதை பெரியாத எடுத்துக் கொள்ளவில்லை. சில தினங்களில் அடுத்தடுத்து செய்திகளில் முழு முடக்கம் என அறிவிப்பு வந்ததது. ஓனர் ஊருக்கு கிளம்பி போகச் சொன்னார். ”அண்ணாச்சி கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்லா... அதுவரைக்கும் நான் இங்கயே கெடக்கேனேன்னு” சொல்லிப் பார்த்தேன். அவரும் அனுமதித்தார். அரசு ஏதேதோ சொன்ன அறிவிப்புகளை செய்தியை கேட்டுவிட்டு வந்த ஓனர், “இந்த மாசத்தோட சம்பளத்தை வாங்கிட்டு, எல்லாரும் கிளம்புங்கடானு” என மிரட்டும் தொனியில் சொன்னார். கையில் ஐயாயிரம் குடுத்தார். நைட்டே கிளப்பு எனவும் சொன்னார். மீண்டும் வீட்டுக்கு போவதை நினைத்தாலே அவமானமும், அதன் வலியும் ஞாபகம் வந்தது. ஓனரிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு, ”கொஞ்ச நாள் தங்க மட்டும் இடம் குடுங்கள்” என கேட்டேன். “வேலையே இல்ல.. அப்புறோம் உனக்கு இங்க என்னடா வேலை...?” என மீண்டும் மிரட்டி கேட்டார். ”ஊர்ல கடன் அண்ணாச்சி. காசு இல்லாம போக முடியாது. அதான் கொஞ்ச நாள் கம்பெனிலையே தங்கிக்கிறேன்” என சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்பதாய் இல்லை. நீண்ட நேரத்திற்கு பின் சரி 10நாள் மட்டும் தங்கிக் கொள்ள அனுமதித்தார். ஒரு வாரத்திற்கு பிறகு வந்தவர், உடனே கிளம்பும்படி சொன்னார். இதற்கு மேலும் அங்கு இருக்க எனக்கும் பிடிக்கவில்லை. பக்கத்து கம்பெனி வாட்ச்மேன் ஜயாவிடம் தங்கிக் கொள்ள இடம் இருக்குமா? என கேட்டுப் பார்த்தேன். இங்க கேமிரா இல்லை அதனால பின்னாடி மாடி பக்கத்தில் உள்ளே தான் தங்கும் அறையை வாடகைக்கு குடுப்பதாக சொன்னார். மாதம் இரண்டாயிரம் வாடகை கேட்டார். என் கஸ்ட நிலையை அவருக்கு புரிய வைத்தேன். ஐநூறு குறைத்துக்கொண்டார். எந்த வேலையும் சம்பளமும் இல்லாமல் இரண்டு மாதங்கள் ஓடின. கையிலிருந்த எல்லா பணமும் கரைந்தது. வாட்ச்மேன் மே மாதத்தின் இறுதியில் வந்து, ”டேய் நீ உடனே கிளம்பு. கம்பெனி திறக்க போறாங்க” என்றதும் தலை எல்லாம் கிறுகிறுத்தது. “எப்போ திறப்பாங்க” என்றேன். ”இரண்டு-மூணு நாள்ல” என்றார். அத்துடன் நாளையில் முதல் பஸ் ஓடும் என கூடுதல் தகவல் சொன்னார். அன்றைய இரவை அங்கேயே கழித்தேன். அடுத்த நாள் ஊருக்கே திரும்பிவிடுவோம் என நினைத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்துக் கொண்டிருந்தேன். மாஸ்க் இல்லாவிட்டால் அபராதம் என்பதால் கைகுட்டையை முகத்தில் கட்டிக்கொண்டு நடந்துக் கொண்டிருந்தேன். அப்படி இருந்தும் வழியில் அண்ணாச்சி டீ கடைக்கு வரும் பால்ராஜ் அடையாளம் கண்டுக் கொண்டார். ”என்ன டே.... இங்க சுத்திகிட்டு கெடக்க? ஊருக்கு போகலையோ?” எனக் கேட்டார். ”இல்ல அண்ணாச்சி கம்பெனி முடிட்டாங்க. ஒன்னும் வேலையில்ல” என்றேன். ”சரிடே. சீக்கிரமா ஊரு பக்கம் போய் சேரு...” என்று சொல்லிவிட்டு கிளம்ப முற்பட்டார். “அண்ணாச்சி ஒரு நிமிசம்.. கொஞ்சம் போன் தாரிகளா..? ப்ரெண்ட்கிட்ட பேசிட்டு குடுக்கேன்” என்றேன். ”இந்தா டே பேசு....” என குடுத்தார். ”டேய்.... கணேசா எப்படிலே இருக்க...? நான் கவியரசன் பேசுறேன்லே...” என்றேன். பதிலுக்கு அவனும், “சொல்லு மக்கா... எங்கடே இருக்க? ஊர் பக்கம் ஏதும் வாரியா?” என விசாரித்தான். பல நாட்கள் கழித்து வரும் அழைப்பு என்பது ஏதோவொரு உதவியின் குரல் என்றே பார்க்கப்படுகிறது என புரிந்தது. “ஆமாடே.... ஏதாவது வேலை வாங்கி குடுக்கியா...? ஊர்ல நோய் வந்திட்டுனு காலியா கெடக்குடே..” என்றேன். ”சரிலே... நீ இங்க வந்திடு. பிறகு பார்த்துப்போம்..” என்றான். கணேசன் மீது சிறு நம்பிக்கை இருக்க காரணம் அவன் ஊரில் இருந்த வரையிலும், பின் எப்போதும் ஊருக்கு வந்தாலும் தான் எதுவும் பெரிதாக செய்து விடவில்லை என்பது போல தன்னை காட்டிக்கொள்வான். ஆனால் அவன் கோவையில் இரண்டு ஹோட்டலுக்கு மேலாளராக இருக்கிறான் என்பது ஊரில் சிலருக்கு மட்டுமே தெரியும். அவனுடைய ஹோட்டல் கவரில் தான் என்னுடை சில பொருட்களை சுருட்டி வைத்திருந்தேன். காலை கிளம்பும் போது அந்த கவர் கண்ணில் பட்டதும் கணேசனை நினைத்துக் கொண்டேன். ஏதோ சில இயல்பாக காட்சிகளே நம் பாதை சீராக்குகின்றன. ஆன்ட்ராடு போனை உபயோகித்து பல மாதங்கள் ஆனது போல இருந்தது. சிவகாசி கிளம்பி வர அதை விற்றுத்தான் வந்திருந்தேன். இங்கு வந்ததும் மீண்டும் புது போன் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்து கொண்டிருந்தேன். அதுவரை எப்.எம் மட்டும் எடுக்கும் ஒரு செல்லை வாங்கி வைத்தேன். ஆனால் இந்த நோய் வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. எதுவும் இல்லாமல் வந்தேன் மீண்டும் எதுவும் இல்லாமல் செல்வதை போல என்னுள் ஓர் உணர்வு. பஸ் ஸ்டாண்டை சென்றடைந்தேன். அங்கு விசாரித்தேன். மதுரை வரை பஸ் சேவை இல்லை என்றார்கள். கோவை வரை எப்படி செல்வதென குழம்பியிருந்தேன். மாஸ்க் அணியாமல் இருந்தவர்களை போலீசார் அடிப்பதை பார்த்து உள்ளே சிறுபயம் தொற்றிக் கொண்டது. எப்படியோ எதில் பயணித்தாலும் மாஸ்க் வேண்டும் என்பதால் பக்கத்தில் இருந்த கடையில் பத்து ரூபாய்க்கு ஒரு மாக்ஸ் வாங்கி அணிந்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டில் நின்றுக் கொண்டிருந்தேன். அப்போது சில காய்கறி வண்டிகள் கடப்பதை கண்டேன். பஸ்ஸில் போவதை விட இது எளிதாக தோன்றியது. சண்முக அண்ணாச்சியை பார்க்க கிளம்பினேன். அவரிடம் நிலைமையை விளக்கி யாரிடமாவது சொல்லி கோவைக்கு அனுப்பி வைக்க முடியுமா? என கேட்டேன். நீண்ட நேர யோசனைக்கு பின் கடைத்தெருவில் இருக்கும் துரை என்பவரை அழைத்து அவரிடம் என்னை பற்றி சொல்லி உதவி கேட்டார். அவரும் சரி என சொன்னதால் சண்முக அண்ணாச்சிக்கு நன்றி சொல்லிவிட்டு, கடைத்தெருவை நோக்கி நடந்தேன். வயிறு சுண்டி இழுத்தது ஒரு பிஸ்கட் பேக்கட்டை மட்டும் வாங்கி கொண்டு கடைத்தெருவை வந்தடைந்தேன். ”துரை அண்ணனை பாக்கனும்..” என்றேன். என்னை முன்பே அறிந்தது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு, ”அந்த வண்டி தான். போய் ஏறிக்கோ” என்றார். என்னை பழனி வரை அழைத்து செல்வதாய் சொன்னார். ”சரி...” என சொல்லி வண்டியில் ஏறிக்கொண்டேன். வண்டி கிளம்பிய சிறிது நேரத்தில் என்னை அறியாமல் தூங்கித் தொலைந்தேன். பழனிக்கு சிறிது தூரம் முன் வாகனத்தை நிறுத்தி நடந்து வரச்சொன்னார். நானும் மார்க்கெட் வரை நடந்தே வந்தேன். டிரைவர் அங்கிருக்கும் கடைக்காரர் ஒருவரிடன் துரை அண்ணேன் சொல்லிக்காரு கோயம்புத்தூர் வண்டில இந்த பையன ஏத்தி அனுப்பிடுங்க என சொல்லிவிட்டு கிளம்பினார். கடைக்காரரிடம், ”அண்ணே வண்டி எப்போ வரும்?” என கேட்டேன். “இரவு இரண்டு மணிக்கு” என்றார். “சரிங்க அண்ணே...” என்று சொன்னபடியே பக்கத்தில் இருந்த காய்கறி மூட்டை மேல் தலைவைத்து படுத்தேன்.. ”இனி போகும் ஊராவது நம்மை காப்பாற்றுமா...?” என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக் கொண்டே உறக்கிப்போனேன்.