இலக்கியம்

சலூன்

கடைக்குள் நுழைந்த சுந்தரமூர்த்தியைப் பார்த்ததும் "வாங்க சார்... உக்காருங்க... ஒரு கட்டிங், ஒரு சேவிங் ரெண்டு வேலைதான்... பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும்... அப்புறம் நீங்கதான் சார்... பேப்பர் பாருங்க சார்... டீச் சொல்லவா...?" என்றான் கணேசன். "இப்பத்தாய்யா குடிச்சிட்டு வாரேன்... காலையிலயே வெயில் ஜிவுஜிவுன்னு வருது பாத்தியா..." என்றபடி அமர்ந்த சுந்தரமூர்த்தி பேப்பரைக் கையிலெடுத்தார். கணேசன் வெட்டிக் கொண்டிருந்த நபர் நடுத்தர வயசுக்காரர். அரைத் தூக்கத்தில் இருந்தார். சேவிங் பண்ணக் காத்திருந்தவர் ஒரு இளைஞன். போனில் ஏதோ வீடியோ பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். பார்வையைச் சுழலவிட்டு பேப்பரின் முதல் பக்கத்தில் நிறுத்தினார். சுந்தரமூர்த்தி மதுரமலர் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராய் இருந்து சென்ற மாதம்தான் ஒய்வு பெற்றார். கணேசன் மதுரமலரில்தான் எட்டாவது வரை படித்தான். எட்டாவதில் அவர்தான் அவனுக்கு வகுப்பு ஆசிரியர். அவன் அடி வாங்காத நாளில்லை. பள்ளிக் கூடத்தில் எல்லாக் குசும்பு வேலைகளிலும் அவன் இருப்பான். ஆனால் படிப்பு மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது. ‘உங்கப்பனோட கடைக்குப் போனியன்னா அவனுக்கு உதவியா இருக்கும்டா... இங்க வந்து எங்க தாலிய ஏன்டா அறுக்குறே’ன்னு அடிக்கடி அவனைத் திட்டுவார். ஒன்பதாவதுக்கு அருகில் இருந்த கிறிஸ்தவப் பள்ளிக்குப் போனவன் இரண்டு வருசம் முயற்சித்தும் பத்தாவதுக்குள் போக முடியவில்லை என்பதால் அப்பாவோட கடைக்குப் போக ஆரம்பித்து விட்டான். கடைக்கு முடிவெட்ட வரும் போதெல்லாம் ‘சாமிநாதா உம்மகனுக்கிட்ட எட்டாபுலயே சொன்னேன்... பேசாம உங்கப்பனுக்கு உதவியா இரு... தொழில் கத்துக்கலாம்ன்னு எங்க கேட்டான்?. வராத படிப்பைப் படிச்சி கலெக்டெராகப் போற மாதிரியில்ல சாமியாரு ஸ்கூலுக்குப் போனான்... இப்ப என்னாச்சு ரெண்டு மூணு வருசம் வீணாப் போச்சுல்ல...’ எனச் சிரிப்பார். ‘அட ஏஞ்சார் நீங்க வேற... இந்தப் பொழப்பு என்னோட போகட்டும் இவனாச்சும் படிச்சி ஒரு நல்ல வேலைக்குப் போகட்டும்ன்னு நினைச்சா.... உங்க வாய் முகூர்த்தமோ என்னவோ அவனும் கத்திரி பிடிக்கிறேன்னு வந்து நிக்கிறான். இங்க வச்சிக்கிட்டா சரியா வராது. மச்சினன் மெட்ராஸ்ல கடை வச்சிருக்கான்... அங்கிட்டு அனுப்ப வேண்டியதுதான்... வேறென்ன செய்யட்டும்... தலையெழுத்து இதுதான்னா மாத்தவா முடியும்’ எனச் சிரிப்பான் சாமிநாதன். சாமிநாதன் பானுமதியோட இந்தக் கடையை வாடகைக்குப் பிடிக்கும் முன்னால ராஜாவோட டீக்கடையும் அதுக்குப் பக்கத்துல இருந்த செலின் சவுண்ட் சர்வீஸூம் இருந்த இடத்துக்கு அருகில் கிடந்த காலியிடத்தில் மாசம் அம்பது ரூபாய் தர்றேன்னு சொல்லி அவனோட அப்பா முருகேசன் கூரை போட்டு கடையை ஆரம்பிச்சாரு. அதுவரைக்கும் அவரு அரச மரத்தடியிலதான் உக்காந்து முடிவெட்டிக்கிட்டு இருந்தார். கூரைக் கொட்டகை கடை ஆரம்பிச்சதும் கொஞ்சம் ஆட்கள் கூடுதலாகவே வர ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் அந்தப் பகுதியில் இருக்கும் கிராமத்து ஆளுகளுக்குத்தான் வெட்டுவாரு... அவங்களுக்கு இவருதான் குடி அம்பட்டையன்... வெளஞ்சதும் ஆறு கருதுக்கட்டும் கையில கொஞ்சம் காசும் கொடுப்பாங்க... தீபாவளிக்கு புதுத்துணியும் பலகாரமும் கொடுப்பாங்க... பொங்கலுக்கு ரெண்டு கரும்பும் பஞ்சரிசியும் கொடுப்பாங்க... அதுதான் அவருக்கான வருமானம்... ஒரு சிலர் எப்போதேனும் அஞ்சோ பத்தோ கொடுப்பார்கள். விடிஞ்சா எந்திரிச்சா செரைக்கிறதுதான் வேலை என்று புலம்பும் முருகேசன் ஒம் முருகா சுருட்டை வலுக்கட்டாயமாக இழுத்துவிட்டு சுருட்டு வாசம் வீசும் மூச்சை புஸ்ஸூ புஸ்ஸூன்னு விட்டபடி இருமிக்கிட்டேதான் வெட்டுவார். சுந்தரமூர்த்தியெல்லாம் படிக்கிற காலத்துல இருந்து அவருக்கிட்டதான் வெட்டிக்குவார். காசு இல்லாம வெட்டுறதுக்கு பயலுக காலையில கடைக்குப் போனா... ஆமாடா விடிஞ்சோடனே வந்துடுங்கடா... காலங்காத்தாலதான் நாலு தலையில கை வச்சி ஏதோ அஞ்சு பத்துப் பாக்கலாம்ன்னு பார்த்தா அதையும் கெடுத்துடுங்கன்னு முணங்குவாரு... சுந்தரமூர்த்திக்கிட்ட மட்டும் முணங்க மாட்டாரு... ஏன்னா அவரு அப்பா ஆறுமுக வாத்தியார் முடி வெட்ட வர்றப்போ ஏதாவது பணம் கொடுப்பாரு.... அதனால சுந்தரமூர்த்தி வந்தா மட்டும் சிரிச்சிக்கிட்டே வெட்டி விடுவாரு. அவருக்கு அப்புறம் சாமிநாதன் கடையைப் பார்க்க ஆரம்பிச்சப்போதான் பானுமதி ஏழு கடை கட்டி வாடகைக்கு விட்டுச்சு... அதுல ஒரு கடையை சாமிநாதன் பிடிச்சி, மத்த கடைங்க மாதிரி சுத்தி கண்ணாடி, ஸ்பீக்கர், பாரின் பவுடர், சேவிங்க் போம், டிரிம்மர், முகத்துல போடுற க்ரீம், டிஷ்யூ பேப்பர், லொட்டு லொசுக்குன்னு எல்லாம் வச்சி எக்ஸ்போ ஹேர் கட்டிங் சலூன்னுன்னு பேர் வச்சான். சாமிநாதனோட கடைக்குள்ள எப்பவும் ஊதுபத்தி மணமிருக்கும்... சாயந்தரம் வாசலைக் கூட்டி தண்ணி தெளித்து முருகன் படத்துக்கு முன் விளக்கேற்றி சாமி கும்பிடுவான். ஸ்பீக்கரில் ‘முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே...’ என்ற பாடல் ஓடிக் கொண்டிருக்கும். இது தினமும் நடக்கும். சாமி கும்பிட்டு முடித்ததும் போடப்படும் முதல் பாடல் 'எப்படி எப்படி சமைஞ்சது எப்படி' என்பதாய்த்தான் இருக்கும். கடையில் ராணி முத்துக் காலண்டர் இருக்கும்... அதில் போன் நம்பரெல்லாம் எழுதியிருக்கும்... எம்ஜிஆர் ஒரு பக்கம் மாலைக்குள் சிரிப்பார். ரஜினியும் கமலும் தினமலர் தீபாவளி மலருக்கு இனாமாய் வந்து சுவரை அலங்கரித்திருப்பார்கள். முடிவெட்ட வருபவர் பார்க்கும் விதமாக சலூன் கடைகளின் சங்கம் நிர்ணயித்த விலைப்பட்டியல் ஒட்டப்பட்டிருக்கும்... அதன்படி அவன் வாங்குவதில்லை.... கொடுப்பதை வாங்கிக் கொள்வான்... எப்போதும் முகத்தில் ஒரு சிரிப்பு இருக்கும். அவன் முருகேசனைப் போல் கடுகடுவென இருந்து பார்த்ததில்லை... யார் தலையில் கை வைத்தாலும் பேச்சுக் கொடுத்தபடி, அவனுக்குத் தெரிந்த கள்ள உறவுகள் பற்றிப் பேசிக்கொண்டேதான் வெட்டுவான்... எப்பவும் கோல்ட் பில்டர் சிகரெட்தான் பிடிப்பான். கடை அடைத்ததும் வாடியார் வீதியில் இருக்கும் லக்கி ஒயின்ஸ் போய் குடித்துவிட்டு பிள்ளைகளுக்குத் தின்ன எதாவது வாங்கிக் கொண்டு போவதை வழக்கமாக வைத்திருப்பான். “நல்லா வேலை பார்க்கிறே.... எதுக்கு இந்தக் குடி...? இது இல்லேன்னா நல்லாயிருப்பேதானே....” என யாராவது கேட்டால்.... “நாலெல்லாம் நிக்கிறேன் உடம்பு வலி போய்ப் படுத்தா தூக்கம் வர வேண்டாமா..? அதான் கொஞ்சமாத்தான் குடிப்பேன்... அதிகமில்லை” என சமாளிப்பான். பானுமதியின் கணவன் வெளிநாட்டில்... இரண்டு குழந்தைகள்... சாமிநாதனுக்கும் பானுமதிக்கும் தொடர்பு என பரவலாகப் பேசப்பட்டது... ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மையின்னு தெரியாது... பார்க்கப் போனால் பானுமதிக்கும் சாமிநாதனுக்கு பத்து வயசாவது வித்தியாசம் இருக்கும்... அட அவன அண்ணன்னுதான் கூப்பிடும்.. அதோட கட்டிடத்தில் கடை வச்சிருக்கதால, உதவிக்கு ஆளில்லாததால அவனை உதவிக்கு கூப்பிடலாம் இல்லையா... பொண்ணு புள்ளய விசயத்துல தப்பாப் பேசாதியப்பான்னு சிலர் மறுத்துப் பேசினார்கள். அதையும் மீறி ஆளரவமற்ற மதிய நேரத்தில் கடையின் கதவை இழுத்து விட்டுட்டு பானுமதி வீட்டுக்குப் போவதாக அரசல் புரசலாகப் பேச்சு அடிபட்டுக் கொண்டுதானிருந்தது. சுந்தரமூர்த்தி கூட ஒரு முறை அவன் உள்ளிருந்து வருவதைப் பார்க்க நேரிட்ட போது மண்பானைத் தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு வாரேன் சார் என்றான். இந்த விவகாரம் அவன் மனைவி காதுக்குப் போன போது அங்க கடை இருக்க வேண்டாம், வேற இடம் பாருங்கன்னு சண்டை போட்டா... ஆனாலும் சாமிநாதன் அவளை மிரட்டி அடக்கி வைத்து விட்டான்... மேலும் கடை வாடகையும் ஏறாமல் பார்த்துக் கொண்டான். ஒரே இடத்தில் கடை என்றானபோது வாடிக்கையாளர்களின் வரவும் பாதிக்காமல் இருந்தது. எப்பவும் போல் கடையடைத்துவிட்டு லக்கி ஒயின் போய் குடித்துவிட்டு வீட்டுக்கு புரோட்டா வாங்கிட்டு வந்தவனை லாரி தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டது. ஒரே நாளில் எல்லாம் மாறிவிட காரியங்கள் எல்லாம் முடிந்த பின்னர் கணேசன் தொடர்ந்து கடையை நடத்த ஆரம்பித்தான். இப்ப அருகிலிருக்கும் ஐடிஜ பசங்களுக்கு அதுதான் பொழுது போக்கிடம். கணேசன் மெட்ராசில் தொழில் பழகியவன் என்பதால் மற்றவர்களைவிட முடிவெட்டுவதில் நிறைய நுணுக்கம் கற்று வைத்திருந்தான். கடைக்கு ஏசி பண்ணியிருந்தான். அப்பனைக் காட்டிலும் தொழில் செய்வதில் கில்லாடியாய் இருந்தான். எப்படிப் பாட்டுப் போட்டு பசங்களை இழுக்கலாம் என்பதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தான். பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்த்தாற்போல் கடை வைத்திரும் சந்திரன் மகளைச் சமீபத்தில்தான் மணந்திருந்தான். அன்னைக்கு படிப்பு வரலைன்னாலும் இன்னைக்கு தொழிலை நல்லாப் படிச்சிட்டான். விதவிதமா வெட்டி விட்டான். மஜாஜ், பேஸ் பிளீச்சிங், கலர் டை என ஆட்களை இழுக்கும் கலையைத் தெரிந்து வைத்திருந்தான். முடி வெட்டி முடித்ததும் தலையில் கையால் மெல்ல அடித்து, ஒரு தாளக்கதிக்குச் சென்று பின் தலையை மெல்ல ஆட்டி இரண்டு பக்கமும் அவன் எடுத்து விடும் சொடக்கு கொடுக்கும் சுகமே தனிதான். இப்பல்லாம் குடி அம்பட்டையன் அப்படிங்கிற பேச்சுக்கே இடமில்லை... விவசாயமும் இல்லை.... சங்கத்தில் என்ன பணம் போட்டிருக்கோ அதுதான் கட்டிங், சேவிங்குக்கு எல்லாம்... பிளேடு புதிதாய்ப் போடுவான்... கத்தி, கத்திரியை எல்லாம் சுடு தண்ணியில் கழுவி எலெக்ட்ரானிக் ஹீட்டரில் வைத்திருப்பான்... கடையும் எப்பவும் சுத்தமாக இருக்கும். இறந்த வீட்டுக்கு வேலை செய்யப் போனால் ரெண்டாயிரத்துக்குக் குறைந்து வாங்குவதில்லை... ஒரு நாள் கடை விடுமுறையாக இருக்கும்... அல்லது மதியம் வந்தால் குளித்துவிட்டு வந்து கடையில் சாமி கும்பிட்டபின் தான் வேலையைத் தொடங்குவான்... சாமிநாதன் மகன் கெட்டிக்காரனா இருக்காம்ப்பா.... தொழில்ல கில்லாடின்னு பேச்சு இருக்கத்தான் செய்தது. 'சார் வாங்க... உக்காருங்க.....' கணேசன் சேரைத் தட்டி சுத்தம் பண்ணியபடி அழைக்கவும் பேப்பரை வைத்து விட்டு சட்டையைக் கழற்றி ஹாங்கரில் மாட்டிவிட்டுச் சேரில் ஏறி அமர்ந்து சுவரைப் பார்த்தார்.. எம்.ஜி.ஆர், ரஜினி, கமலெல்லாம் ரிட்டையர்ட் ஆகி, எங்கும் மகளிர் என்பதாய்க் காட்சியளித்தது. சாமிநாதன் மாலைக்குள் சிரித்துக் கொண்டிருந்தான்... கீழே ஒரு சிகப்புக் கலர் ஜீரோ வாட்ஸ் பல்ப் மின்னி மின்னி எரிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் கண்ணாடிக்கு மேலே பெரிய பெரிய வழுவழுப்பான பேப்பர்களில் தற்போதைய பிரபல நடிகைகள் தொப்புளையும் மார்பையும் காட்டிக் கொண்டு நின்றார்கள். குறிப்பாக ரம்யா பாண்டியனின் இடுப்பு டிஜிட்டல் பிரிண்டில் பளபளத்தது. தனக்குள் சிரித்துக் கொண்டு "யாருப்பா அது..? இப்ப நயன்தாரால்லாம் அவுட்டா?" என்றார் கேலியாய். "அது இடுப்பால பேமஸான நடிகை சார்... ரம்யா பாண்டியன்னு பேரு..." வெட்கமாய்ச் சிரித்தபடி வெள்ளை வேஷ்டியை அவர் உடம்பில் போர்த்தி கழுத்தைச் சுற்றி பேப்பர் ஒட்டினான். பேப்பர் ஒட்டுவது அவருக்கு புதிதாய்த் தெரிந்தது. வேலாயுதம் இப்படிச் சுற்றி கழுத்துப் பகுதியில் முனையைச் சொருகி வைப்பான். இவன் பேப்பரால் ஒட்டுகிறான். '"ம்" என்றபடி பார்வையைச் சுழற்றினார்... கடையில் எப்பவும் தொங்கும் முருகன் படம் போட்ட ராணிமுத்து காலண்டரையும் காணோம்... அதற்குப் பதிலாக டிஜிட்டல் நாட்காட்டி கண்ணைச் சிமிட்டி மணியும் தேதியும் காட்டிக் கொண்டிருந்தது. பசங்களைக் கவரும் உக்தி இதுதான் போல சிரித்துக் கொண்டார். அப்போது கணேசனின் போன் அடித்தது. 'ம்... ஒரு கட்டிங் மட்டும்தான் இருக்கு... இப்பவே போகணுமா..? எங்க சாருக்குத்தான் கட்டிங் பண்றேன்... கொஞ்ச நேரந்தான்... முடிஞ்சிடும்... ஆமா அங்க நான் வந்து என்ன பண்ணப் போறேன்... என்ன வரணுமா... மதியம் சாப்பிட்டதும் வந்துடலாமா...? ம்... அப்ப எனக்குச் சாப்பாடு…? அந்த விருந்தை யார் கேட்டா...? ம்... அப்பச் சரி... பத்து நிமிசத்துல போலாம்... அந்த ரெட் கலர் சாரி கட்டிக்க... அதான் அழகாயிருக்கும்.... ஆமாமா... சரி... சரி...' என்றபடி போனை வைத்தவன் சுந்தரமூர்த்தியின் தலையைச் செதுக்க ஆரம்பித்தான். ‘வீட்ல இருந்தா...? விருந்துக்கு எங்கயும் போகணுமா..?’ ‘இல்ல சார்... இது வேற...’ லேசான வெட்கத்துடன் சொன்னான். சுந்தரமூர்த்தி கடையில் இருந்து வெளியேறியதும் கதவை இழுத்து விட்டுட்டு முகம் கழுவ உள்ளே ஓடினான். பாண்டியன் கடையில் சில மளிகைச் சாமான்களை வாங்கிக் கொண்டு, பவண்டோவை வெயிலுக்கு இதமாய் உள்ளுக்குள் இறக்கிக் கொண்டிருக்கும் போது கணேசனின் வண்டி வேகமாய்ப் போனது... அவன் பின்னே சிகப்புச் சேலையில் பானுமதி சிரித்தபடி அமர்ந்திருந்தாள். சாமிநாதனைப் போலவே அவனின் மகனும் கடையை நடத்துவதில் கில்லாடிதான் என்பது சுந்தரமூர்த்திக்குப் புரியும் போது பவண்டோ பாட்டில் காலியாகி இருந்தது.