இலக்கியம்

நினைவுத் திரட்டி

அவர்கள் பத்து பேரும் பெரிய மடையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். பெரிய மடை என்பது அவர்கள் ஊர்க் கண்மாயில் இருக்கும் ஐந்து மடைகளில் சற்றே பெரியதும், ஏறத்தாழ நாற்பது ஏக்கருக்கு மேல் தண்ணீர் பாய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்டதும் ஆகும்... ஆம் பயன்படுத்தப்பட்டதுதான் இப்போது பெரிய மடை என்பது உடைந்த இரு பக்கத் திண்டுடன் தண்ணீர் அதன் வழிப் பாயாத ஒரு மடைதான்... கண்மாயில் தண்ணீர் இருந்தாலும் வயல்கள் பயிர்களைப் பார்த்து கிட்டத்தட்ட பதினைந்து வருடத்துக்கு மேலாகிவிட்டது. இந்தப் பதினைந்து ஆண்டில் விவசாயம் பார்த்த பலர் போய்ச் சேர்ந்து விட்டார்கள். இப்ப இருக்கும் சிலருக்கு எந்தெந்த வயல் நம்முடையது என்பது கூட சரியாகத் தெரிவதில்லை... ரோட்டில் நின்று பார்த்தால் பச்சைப் பசேல் என ஒரு காலத்தில் இருந்த வயல்கள் எல்லாம் இப்போது பார்வைக்குக் கிடைக்கவில்லை. விவசாயம் காணாத வயல்களில் வேலிக்கருவையின் விளைச்சல் செழித்துக் கிடந்தது. எந்த வரப்பிலும் நடந்து செல்ல முடியாத நிலையில்தான் இருந்தது. நீரோடிய வாய்க்கால்கள் எல்லாம் உருமாறிக் கிடந்தன... பெரிய வாய்க்கால்கள் இருந்த இடம் தெரிந்தாலும் பல ஊடு வாய்க்கால்கள் போன இடம் தெரியவில்லை. ஒரு வயலுக்கும் அடுத்த வயலுக்கும் இடையில் இருந்த வரப்பெல்லாம் காணாமல் போய்விட்டது. வயலை விற்ற நினைத்தால் கூட முதலில் சர்வே செய்து எதுவரை நம் வயல் எனப் பார்த்து எல்கைக் கல் ஊன்றித்தான் விற்க வேண்டும். இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஊருக்குள் பலர் ரோட்ரோர வயல்களில் வீடுகளைக் கட்டி ரோட்டை ஒட்டி ஓடிய பஞ்சமாரி வயல்களுக்கான வாய்க்கால்களை எல்லாம் வீட்டோடு சேர்த்து மண்ணால் நிரப்பிவிட்டார்கள்... இப்ப பஞ்சமாரி வயலுக்கான வாய்க்கால் பஞ்சத்தில் காணாமல் போனது போல் காணாமல் போய்விட்டது. ஊருக்குள் ரோடும் சுருங்கிவிட்டது. சுவர்களும் வேலிகளும் ரோட்டில் இரண்டடியை தங்களுக்குள் வைத்துக் கொண்டு விட்டன. கேட்பார் யாருமில்லை... யோசிப்பார் எவருமில்லை. எல்லாருக்குமே அந்த இரண்டடியும் வாய்க்காலும் தேவையாகவே இருந்தது... விவசாயத்துக்கு பயனில்லாத வாய்க்கால் எனக்காவது பயன்படட்டுமே எனப் பிடித்துக் கொண்டாரள். கண்மாய்க்குள்ளும் சின்ன வயதில் நாட்டுக்கருவை வைத்து, தண்ணீர் ஊற்றி, மாதம் இவ்வளவென காசு வாங்கி, பள்ளிக்கூடத்துக்குப் போகும் போது அல்வாவும் கடலை மிட்டாயும் வாங்கி விற்பனை செய்து கொஞ்சமாய் தானே தின்று வளர்ந்தவர்களுக்கு வயது ஏறும் போது கண்மாய் முழுவதுக்கும் நாட்டுக் கருவை மரங்கள் அடர்த்தியாய் வளர்ந்து நின்றன. பார்க்கப் பால் போல், குடிப்பதற்கு அவ்வளவு சுவையாய் இருக்கும் தண்ணீர், வேலிக்கருவை வளர ஆரம்பித்தபோது கண்ணீர்த் தண்ணி போல் மாறி, அதன் சுவையும் போய்விட்டது. அதே நிலைதான் இப்போதும் மழை பெய்தால் ஒரு இரண்டு நாளைக்குப் பால் போல் இருக்கும் தண்ணி மூன்றாம் நாள் கண்ணீராய் மாறிவிடும். இப்போது யாரும் கண்மாய்த் தண்ணி குடிப்பதில்லை... அடிபைப் தண்ணி கூட குடிக்கப் பயன்படுத்துவதில்லை... ஊருக்குள் டேங்க் கட்டி, வீட்டு வீடு பைப்பும் இழுத்து வைத்திருந்தார்கள். வசதி படைத்தோர் வீட்டில் மினரல் வாட்டர் மிஷின் போட்டிருக்க, மற்றவர்கள் பாட்டில்தான் வாங்குகிறார்கள். இந்த வருடம் மழை பொய்த்துப் போனதால் இப்போது கண்மாயில் தண்ணீர் இல்லை. வறண்டு போய்த்தான் கிடந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அந்த மடை சந்தோஷப் பேச்சுக்களையும் எதிரொலிக்கும் அளவுக்கு வாய்விட்டுச் சிரித்த சிரிப்புக்களையும் கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களில் ஆஜானுபாகுவாய் இருந்த சேகர் மடைத் திண்டில் அமர்ந்திருக்க, அவன் மடியில் படுத்திருந்தான் பாண்டி... அவன் தொடையில் சாய்ந்திருந்தான் செல்வம்... காலடியில் கண்ணதாசன்... அருகிருந்த வேப்பமரத்தூரில் முருகனும் இளங்கோவும் கண்மாய்க்கரையில் அமர்ந்து தரையில் குச்சியால் கீறிக்கொண்டிருந்தான் சாத்தையா... அவனருகே சுப்பிரமணி... உள் பக்கத் திண்டில் சுரேஷும் ராஜாவும்... இப்போதெல்லாம் எல்லாரும் ஒரே நேரத்தில் ஊருக்கு வருவதென்பது அரிதாகிவிட்டது... நல்லது கெட்டதுக்கு என்றாலும் எப்படியும் ரெண்டு மூணு வருவதில்லை... இந்த வருடம்தான் பொங்கலுக்கு எல்லாரும் வந்திருக்கிறார்கள் ஆச்சர்யமாய்... இனி மறுபடியும் எல்லாரும் கூடுவது எப்போதென்பது கண்மாய்க்குள் நிற்கும் முனியய்யாவுக்குக் கூட தெரிய வாய்ப்பில்லை. சின்ன வயதில் இந்தப் பத்துப் பேர் கூட்டணி எப்பவும் ஒன்றாகத்தான் திரியும்... விடுமுறை தினங்களில் பெரும்பாலான நேரங்களை மடையில்தான் களிப்பார்கள்... பேச்சு... பேச்சு... பேச்சு... அதைத் தவிர ஒண்ணும் இருக்காது.... அந்தப் பேச்சில் முக்கியமானது என்று எதுவும் இருக்காது... பெரும்பாலும் கண்டதேவித் தேர், வண்டிப் பந்தயம், வள்ளி திருமணம் நாடகம், கரகாட்டம், சினிமா, பாட்டு என இவைதான் சீசனுக்குத் தகுந்தவாறு ஓடும். இடையிடையே ஏற்படும் சின்னச் சண்டையில் லதாவோ ராதாவோ வந்து போவார்கள். எல்லாரிடமும் குத்தாலம் துண்டு இருக்கும்... அது கழுத்தைச் சுற்றியோ அல்லது இடுப்பிலோ இடம் பிடித்திருக்கும். அதன் பயன்பாடு என்பது மடையிலோ, மரத்தடியிலோ, பாலத்திலோ இல்லை கம்மாய்க்கரையிலோ விரித்துப் படுக்கவோ... கண்மாய்த் தண்ணீரில் நீந்தி விளையாடவோதான் என்றாலும் யாராவது ஒருவரைத் திடீரென துண்டால் மூடி எல்லாருமாய்ச் சேர்ந்து போட்டு மொத்துவதற்கும் அடிக்கடி உபயோகப்படும். அதிகம் அடி வாங்குவது கண்ணதாசனாகத்தான் இருக்கும்... இதற்குப் பயந்து எப்பவுமே அவர்களிடமிருந்து அவன் தனியேத்தான் அமர்ந்திருப்பான்... அப்படியிருந்தும் ஒரு நாளைக்கு குறைந்தது நாலு முறையாவது துண்டு போர்த்தப்படுவான். எப்படி அடி விழும் என்பதெல்லாம் தெரியாது... சில நேரம் அழ வைக்கும்... பல நேரம் கெட்ட வார்த்தையைக் கொட்டித் தீர்க்கும் என்றாலும் இந்த அடி வாங்கும் நிகழ்வு அடிக்கடி யாரேனும் ஒருவருக்கு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். "இப்படி உக்கார்ந்து எத்தனை வருசமாச்சு..." என்றான் சேகர். "ம்... இருபத்தஞ்சி வருசமாச்சு மாமா... அப்ப இங்கதானே கிடையாக் கிடப்போம் இல்லையா...?" என்றான் சுப்பிரமணி. "இருவத்தஞ்சி வருசம்... எவ்வளவு வேகமாப் போயிருச்சு இல்லையா மச்சான்...?" ஆச்சர்யமாக் கேட்டான் சாத்தையா. "ஆமா... லீவு நாள்ன்னா... இந்த இடம்தானே நமக்குச் சொர்க்கம்... இந்தா உக்காந்திருக்காய்ங்களே வேப்பமரம் அது சின்னதா இருந்துச்சு.... அதுலதான் குச்சி ஒடுச்சி பல் விளக்குவோம்... எத்தனை மாற்றம் நம்ம வாழ்க்கையில... இப்ப இதையெல்லாம் நினைச்சிப் பார்க்கக் கூட நேரமில்லாம குடும்பம் வேலையின்னு ஓடிக்கிட்டே இருக்கோமில்லையா..." சிரித்தான் சேகர். "ஆமா மச்சான்... இன்னக்கி இருக்க நம்ம வாழ்க்கை பழசெல்லாம் நினைக்கக் கூட விடுறதில்லை... அந்த வகையில மாப்ள கண்ணதாசன் கொடுத்து வச்சவன்... படிச்சிட்டு அவங்க அப்பா வாங்கிப் போட்டு வச்சிருந்த நாலஞ்சி ஏக்கரையும் தோட்டமாக்கி, தென்னை வாழை விவசாயம்ன்னு ஒரு மகிழ்வான வாழ்க்கையை வாழுறான்... நம்மளை மாதிரி இன்னொருத்தங்கிட்ட கை கட்டி நிக்கலை... காலையில அவசரம் அவசரமா வேலைக்கு ஓடலை... மாதக்கடைசி அவசரம்ன்னு யாருக்கிட்டயும் காசுக்காக கையேந்தி நிக்கலை... உண்மையிலேயே மாப்ள சந்தோஷமா இருக்கான்டா..." என்றான் ராஜா. "அட ஏம்மாப்ள நீயி... இங்கயும் பிரச்சனை இருக்கத்தான் செய்யுது... ஆனாலும் சந்தோஷம் நிறையவே இருக்கு... வயலுக்குள்ள திரியும் போது கிடைக்கிற மகிழ்ச்சி... மனசுல இருக்க வருத்தத்தையெல்லாம் போக்கிடுடா... உந்தங்கச்சி என்னைப் புரிஞ்சிக்கிட்டவ... அவளும் உழைக்கிறதால என்னால மகிழ்வான ஒரு வாழ்க்கை வாழ முடியுது..." "மகன் சொல்றது ரொம்பச் சரி... பொண்டாட்டி சரியா அமைஞ்சா வாழ்க்கை இனிக்கும்... ம்... அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்..." சேகர் சலித்துக் கொண்டான். அதன் காரணம் எல்லாருக்குமே தெரியும். "விடு சித்தப்பு... ஒரு நா சின்னத்தா உன்னையப் புரிஞ்சிக்கும்..." "இனிப் புரிஞ்சி மசுத்துக்கா... அட போ மகனே அங்கிட்டு... அத விட்டுத்தள்ளு... நாம இங்க இருக்கது நம்ம நினைவுகளை ஒருமுறை மீட்டெடுத்து மகிழத்தான்...இதுல எதுக்கு எஞ்சோகக் கதையெல்லாம்..." சிரித்தான் சேகர். "ம்... அந்தக் காலம் இனியா வரப்போகுது மாமா... பாருங்க எல்லாருக்கும் நரைச்சிப் போச்சி... இந்த சாத்தையாப் பயலுக்கும் செலுவப்பயலுக்கும் எம்புட்டு முடி இருக்கும்... இப்ப ரெண்டு பேரும் வழுக்கையா நிக்கிறானுங்க... பாண்டிப்பய எம்புட்டுத் தின்னாலும் வயிறு தெரியவே தெரியாது... பாம்பு வயிறுடா அவனுக்குன்னு எங்கம்மா சொல்லும்... இன்னைக்குப் பார்த்தா கழுத வயிறு மாதிரி எம்மாம் பெரிய தொந்தியோட இருக்கான்... முருகனை ஓட்டத்துல யாராலயும் வெல்ல முடியாது... பொல்லாத ஆக்சிடெண்டுல அவனால இப்ப கால நேர வச்சி நடக்க முடியாமப் போச்சி... வாழ்க்கை நம்மளை ரொம்ப மாத்திருச்சு..." என்றான் ராஜா. "மாற்றங்கள் வரத்தானே செய்யும்... பொங்கத் தீவாளி செவ்வாய்யின்னு ஒவ்வொரு விஷேசத்துக்கும் எல்லாரும் வருவீங்கன்னு நினைப்பேன்... சொல்லி வச்ச மாதிரி யாராச்சும் ரெண்டு பேர் வரமாட்டீங்க... இந்தத் தடவை அத்தி பூத்தது மாதிரி அம்புட்டுப் பேரும் வந்தாச்சு... அதான் எல்லாரும் மடையில போயி உக்காந்து பேசலாம்ன்னு கூப்பிட்டேன்... இதெல்லாம் இனிக் கிடைக்கவா போகுது... அடுத்து எல்லாரும் எப்பக் கூடப் போறோமோ... யாருக்குத் தெரியும்..." துண்டால் முகம் துடைத்தபடி சொன்னான் கண்ணதாசன். "ம்... எல்லாரும் இங்க இருக்கும்போது எனக்குச் சின்னவயசு ஞாபகம்தான் வருது... புளியங்கா சீசன்ல பிஞ்சுப் புளியங்காயைப் பிடிங்கியாந்து இந்தத் திண்டுலயோ இல்லேன்னா பாலத்துலயோ உரசிச் சாப்பிட்டிருக்கோம் ஞாபகமிருக்கா..." நினைவுத் திரட்டியில் இருந்து பிஞ்சிப் புளியங்காயை எடுத்துப் போட்டு ஆவலாய் மற்றவர்கள் முகம் பார்த்தான் சேகர். மனைவியை மறந்து புளியங்காய் எச்சிலை தொண்டைக்குள் இறக்கவும் செய்தான். "அத எப்புடி மறக்குறது பங்காளி... அதுவும் வேலுச்சாமி ஐயாவோ மரத்துலதான் நிறையப் புடுங்குவோம்... அதுதானே இனிப்புப் புளி... அதுவும் ராஜாப்பய உரசிக்கிட்டு இருக்க நாம வழிச்சிக்கிட்டு ஓடுவோமே... மறக்க முடியுமா..?" ராஜாவைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னான் இளங்கோ. "அந்த அரக்காய்... வெளிர் பச்சையில இருக்குமே... எவ்வளவு இனிப்பா இருக்கும்... மறக்கவே முடியாதுடா அதையெல்லாம்... மச்சான் எப்பவும் மரத்துலதான் கிடப்பான்..." சேகரைப் பார்த்துச் சொன்னான் சாத்தையா. "இந்தா இவுக டப்பாவுக்குள்ள பத்திரப்படுத்திக் கொண்டு போய் அவுக கிளாஸ்ல ஜெஸிந்தாவுக்கு கொடுப்பாக..." செல்வம் தலையில் அடித்தான் பாண்டி. "புளியங்கா மட்டுமா... மாங்கா... காராங்காய்... சூராங்காய்ன்னு எல்லாமே பார்சலாகும்... கடைசியில அது மரியக்கண்ணுக்கிட்ட மயங்கிருச்சு... பய சாமுண்ட்ரி பாக்ஸையே தூக்கிப் போட்டு மிதிச்சி நெளிச்சிப் போட்டானா இல்லையா..." முருகன் சொல்ல எல்லாரும் சிரித்தார்கள். அசட்டுச் சிரிப்போடு “விடுங்கடா அதெல்லாம் கிளப்பிக்கிட்டு...” என்றான் செல்வம். "அதை விடுங்க... ராமாயி ஆயா கத்தக்கத்த மாமமரத்துல மாங்காயப் புடிங்கிக்கிட்டு ஓடியாருவோம்... அது பேதியில போவியளா... நாசமத்துப் போவியளா... தூமியக் குடிக்கிகளா... சாண்டயக் குடிக்கிகளான்னு கத்திக்கிட்டே கம்பெடுத்துக்கிட்டு ஓடியாருமில்ல..." சுரேஷ் இப்பக்கூட ராமாயி ஆயா ஓடியார மாதிரி ரோட்டைப் பார்த்துப் பேசினான். அந்த மாமரம் கூட வெட்டப்பட்டு விட்டது. "ம்...அது ஒரு பேச்சாப் பேசும் மகனே... அம்புட்டும் கெட்ட வார்த்தை... அப்ப நமக்கு மாங்காயை விட புளுத்த திட்டெல்லாம் பெரிசாத் தெரியலை... மாங்காயக் களவாண்டு திங்கிறதுக்கு ஏம்புட்டு இதைத் தின்னுங்கடான்னு எல்லாம் திட்டியிருக்கு... ஒரு தடவை மாரிமுத்துப் பெரியப்பா அது பேசுறதைப் பார்த்துட்டு அவருக்கு கேலி மொற வேறையா... எடுத்துக் கொடு... பயலுக மென்னு திங்கட்டும்ன்னு சொல்லிட்டாரு... அதுக்கு அப்புறம் அது மாங்காயைத் திங்கிறதுக்கு கம்மாக்கரையில கிடக்க நரகலைத் தின்னுங்கடான்னு திட்ட ஆரம்பிச்சிது... கம்மாய்க்கரை பூராம் அப்ப அதுதானே கிடக்கும்... இப்ப ஊரில் ஆட்களும் இல்லை... கம்மாய்க்கரை நிறையவும் இல்லை..." பழசை மனதில் இருந்து அள்ளிப் போட்டான் சேகர். "ஆமா ஒரே எரியில எத்தனை மாங்காய் விழுகுதுங்கிறதுதான் நமக்குள்ள போட்டியா இருக்கும்... செல்வம்தான் நாலஞ்சி விழுத்தாட்டுவான்..." செல்வத்தின் தலையில் மீண்டும் அடித்தான் பாண்டி. "ஏன்டா தாயில்லாப்புள்ள மாதிரி அவன் தலையில அடிக்கிறே... டேய் பங்காளி... உங்கையியல் இருக்க கம்ப அவன் கையில கொடுடா... கை வலிக்கப் போகுது... சும்மா நொட்டு நொட்டுன்னு அடிச்சிக்கிட்டு... நீ இன்னமும் அப்புடியேதாண்டா இருக்கே... ஆமா வீட்டுல பொண்டாட்டிய இப்புடி நொட்டு நொட்டுன்னு அடிச்சா சாப்பாடு கிடைக்காதே..." சிரித்தான் ராஜா. "அது திருப்பி வெளுத்து விட்டுருதாம்..." என்றான் சுரேஷ். "ஹா...ஹா... இந்த லெட்சுமணன் செட்டியாரு தோட்டத்துல எளநீ வெட்டிக் குடிச்சி காவக்கார பூமி அண்ணன் கம்பெடுத்துக்கிட்டு விரட்டி வந்து பிடிக்க முடியாம திட்டு திட்டுன்னு திட்டுவாரே ஞாபகமிருக்கா...?" கேட்டான் செல்வம். "ஆமாமா... அந்தாளு திட்டுனாலும் அடுத்தநாளே மறுபடியும் இளநீ வெட்டப் போகாமயா இருந்தோம்... எம்புட்டு எளநீ வெட்டிக் குடிச்சிருக்கோம்... இன்னைக்கு ஒரு எளநீ ஐம்பது ரூபாய் சொல்றான்...” என்றான் சேகர். "அது எப்படி மச்சான்.... அந்த எளநியே நமக்காகத்தானே காச்சிச்சு... அதோட அந்தத் தோட்டத்து ஓரத்துல கள்ள வீட்டு கணேசன் ஊரல் போட்டு வச்சிருக்கிற பானையெல்லாம் குச்சியால ஓட்டை போட்டு வச்சிட்டு வருவோமோ ஞாபகமிருக்கா...?" எனக் கேட்டான் சாத்தையா. "ஓட்டை மட்டுமா போட்டோம்... இந்தப் பாண்டிப்பய அதுல பேட்டரிய ஓடச்சிப் போட்டிருப்பாங்கன்னு சொன்னா அதெல்லாம் ஊரலை எடுத்துக் காய்ச்சும் போதுதான் போடுவானுங்கன்னு அதுல கிடக்க முந்திரி, கிஸ்மிஸ், திராட்சை, பேரிச்சம்பழம், வெல்லமெல்லாம் அள்ளித் தின்பானுல்ல..." சிரித்தபடி சொன்னான் முருகன். "மயிராண்டி... நீங்க திங்க மாட்டியளோ..." கல்லெடுத்து எறிந்தான் பாண்டி. "ஏய் எல்லாருந்தான் தின்னோம்... ஆனா நீ ரொம்ப ஓவரு... தின்னுட்டு மூத்தரத்தையில்ல பேஞ்சி வைப்பே..." பாண்டியின் முகத்தில் துண்டால் அடித்தான் செல்வம். "அதெல்லாம் மறக்க முடியுமா...? இப்பப் பாருங்க கண்ணதாசனை கோபப்பட வைக்கிறேன்..." என்றபடி சேகர் மடியில் கிடந்த பாண்டியை தட்டி எழுப்பிவிட்டு, கண்ணதாசனுக்கு அருகில் போயி "என்ன மகனே... லதாவும் நீனும் இந்த மடைக்குள்ளதானே பேன் பாத்தீங்க... அது உள் மடையா... பொற மடையான்னு மறந்து போச்சுடா..." என்றதும் கண்ணதாசன் "அட ஏஞ்சித்தப்பு நீங்க வேற... எவனோ சும்மா கதை விட்டதை இன்னமும் நம்பிக்கிட்டு இருக்கீக... அந்தப் புள்ளைக்கிட்ட அப்ப நான் பேசுனதே இல்லை... அப்புறம் எப்படி பேன் பாக்குறது... நல்லாத்தேன்... இப்ப வாராவாரம் சந்தையியல பார்ப்பேன்... சிரிச்சிட்டுப் போகும்..." என்றான். "டேய்... டேய்... விடுடா... ஜவுளிக்கடையில போயி பாடி சைஸ் சொல்லிக் கேட்டா கொடுப்பாங்களான்னு எங்கிட்ட கேட்ட வந்தானே நீயி..." சிரித்தான் சுரேஷ். "அது லதாவுக்கா கேட்டேன்..?" "லதாவுக்கோ... ராதாவுக்கோ.... கேட்டியா இல்லையா... அதைச் சொல்லு..." "சரி கேட்டேன்னு வச்சிக்க... வாங்கிக் கொடுத்தேனா... இல்லையில்ல..." "எனக்கென்ன தெரியும்... எனக்குத் தெரியிற மாதிரியா போட்டுக்கிட்டு வரும்... உனக்குத்தான் காட்டியிருக்கும்..." நக்கலாய்ச் சொன்னான் சுரேஷ். "எதை...?" ஆவலாய்க் கேட்டான் இளங்கோ. "ம்... பாடியைத்தான்..." பொத்தாம் பொதுவாய்ச் சொல்லி வைத்தான் சுப்ரமணி. எல்லாரும் சிரித்தார்கள். கண்ணதாசனும் சேர்ந்து கொண்டான். "டேய் நொக்காளி... நீ ரொம்பப் பேசுறே.... நாப்பத்தெட்டு வயசுல பேசுற பேச்சைப் பாரு..." மண்கட்டியை எடுத்து எறிந்தான் கண்ணதாசன். அது கண்மாய்க்குள் போய் விழுந்து சிதறியது. "டேய் அவனை விடுங்கடா... பாவம்... எல்லாரும்தான் லதா பின்னால திரிஞ்சோம்... இந்தா முருகனுக்கு அது மொறப்படி சின்னத்தா வேணும்... ராஜாவுக்கு தங்கச்சி வேணும்... செல்வத்துக்கு அத்தை மொற... அப்ப யாரு மொற பாத்தா... கம்மாயில அது குளிக்குதுன்னா எல்லாருந்தான் கம்மாய்க்குள்ள கிடந்தோம்... அதுக்கு மட்டுமா கிடந்தோம் ராதாவுக்கும்தான் கிடந்தோம்... அவனை மட்டும் கேலி பண்ணிக்கிட்டு... முருகனும்தான் லீவு நாள்ல பல்லாங்குழி, தாயமெல்லாம் விளையாண்டிருக்கான்..." எனக் கண்ணதாசனுக்கு ஆதரவாய்ப் பேசுவது போல் பேசிவிட்டு "என்ன லதாவுக்கு கண்ணதாசன் மொறப்பய... அதுபோக அவன் பேன் பாக்குறது ஏதோ ஒரு விதத்துல பிடிச்சிருந்திருக்கு... பாக்க விட்டுச்சு... விடுங்கடா..." என்றான் நக்கலாய். "சித்தப்பு வேண்டாம்... அப்புறம் சித்தப்பன்னு பார்க்க மாட்டேன்... கருவாச்சிக்கு தேங்காய் கொடுத்து அவங்க ஆத்தாக்கிட்ட மொத்து வாங்குன கதையை மறு ஒலிபரப்பு பண்ணிருவேன்..." "விட்றா... விட்றா... மவனே... அப்பன் மகனுக்குள்ள பேசுற பேச்சா இது..." சிரித்தான் சேகர். "மாமா ஞாபகம் இருக்கா..? ராணி அக்காவும் செந்தி மாமாவும் சறுக்கை அரச மரத்தடியில உக்காந்திருந்தது... நாம சத்தமில்லாம கம்மாய்க்குள்ள இருந்து அவங்களை நோக்கி வர்றதைப் பார்த்துட்டு அவங்க வேகவேகமாக எழுந்து அசட்டுச் சிரிப்புச் சிரித்தது..." கேட்டது பாண்டி. "மறக்கமுடியுமா மாப்ள... பதறியில்ல எந்திரிச்சாங்க.... டேய் வீட்டுல சொல்லிடாதீங்கடான்னு ரெண்டு பேரும் கெஞ்சின கெஞ்சை மறக்க முடியுமா...?." சிரித்தான் சேகர். "அவங்க கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு பார்த்தா... அது நடக்கலை... ராணி அக்காவை ஊருக்குள்ளயே அவங்க மாமா மகனுக்குக் கட்டிக் கொடுத்தாங்கள்ல... அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் பேசிக்கிறதே இல்லையில்ல..." "ம்... செந்தி மாமா அதுக்கு அப்புறமே பேச்சையெல்லாம் குறைச்சிட்டாரு... எதுலயும் கலந்துக்கிறதில்லை... கல்யாணமே பண்ணிக்கலை...” "ஆமா... விவசாயம்தான் பார்த்தாரு... தம்பிக வீட்டுக்குத்தான் சம்பாரிச்சிக் கொடுத்தாரு... ராணி அக்கா செத்தப்போ அவங்க வீட்டுக்குப் பொயிட்டு யார்க்கிட்டயும் பேசாம என்னையக் கூட்டிக்கிட்டு இந்த மடைக்கு வந்து படுத்துக்கிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாரு... எம்புட்டோ ஆறுதல் சொல்லியும் அவரோட அழுகை தீரவேயில்லை... அவ மொகத்தைப் பார்த்துக்கிட்டு வாழ்ந்த என்னால இனி ரொம்ப நாள் இந்த ஊர்ல வாழ முடியாதுடா கண்ணான்னு சொன்னாரு... சொன்ன மாதிரியே அவரும் போய்ச் சேர்ந்துட்டாரு... அவரு செத்தப்போ சித்ரா அத்தாச்சி... அவரு மேல விழுந்து அப்படிக் கதறி அழுதுச்சு.. ஒருவேளை அது அவரைக் கட்டிக்கலாம்ன்னு நினைச்சிருந்திருக்கலாம்... மனசுக்குள்ள என்ன இருந்துச்சுன்னு யாருக்குத் தெரியும்." என்றான் கண்ணதாசன். "ம்... எவ்வளவு நினைவுகள்... இன்னைக்கு மாலையை வாழ்க்கையில மறக்கவே முடியாது..." என்றபடி எழுந்த இளங்கோ, சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான். செல்வமும் பாண்டியும் அவன் கையிலிருந்த சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டார்கள். "இருட்டிருச்சு... வீட்டுல தேடுவாங்க... வாங்க போகலாம்" சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து ஊதியபடி சொன்னான் இளங்கோ. "அப்பவும் இதுதான் அம்மா தேடுவாக... அப்பா தேடுவாகன்னு கிளம்பும்... இப்பவும் அதையே செய்யுது பாரு..." சிரித்தான் சுரேஷ். "அட இருடா... இனி எப்பக் கூடப் போறோமோ... அன்னைக்கு ஆத்தாவுக்குப் பயந்தே... இப்ப பொண்டாட்டிக்குப் பயப்படுறே..." சிரித்தான் முருகன். "ஆமா நீங்க பயப்புடவே மாட்டீங்க... என்னங்கன்னு சத்தம் வந்தா... இந்தா வந்துட்டேன்னு ஓடுறதைத்தான் பாக்குறமே... இன்னைக்குத்தான் இம்புட்டு நேரம் எங்க கூட இருந்திருக்கே... இல்லேன்னா வர்ற சமயம் பூராவும் வீட்டுக்குள்ளதான் கிடப்பே..." "சரி... சரி... எதுக்குப் பொட்டலத்தை அவுக்குறே..." என்றபடி முருகன் ஒரு கல்லெடுத்து இளங்கோவின் வயிற்றின் மீது எறிய, "அங்க எதுக்கு எறியுரே தலையில எறி பங்காளி" என்றான் சிரிக்காமல். அடுத்த மண்கட்டி அவன் தலையில் விழுந்தது. ஆளாளுக்குத் தலையில் எறிய, "ஏன்ன்... ஏண்டா... துண்டு போர்த்த முடியாம கல்லெறியிருங்களா..." "நீதானே உடைக்கிற தேங்காய தலையில உடைங்கன்னு சொன்னே..." சிரித்தான் செல்வம். "ஞாபகமிருக்கா... தண்ணி எறைக்க முடியலைன்னு மோட்டர் வைப்போமுல்ல... அப்படி ஒரு வருசம் மோட்டார் வச்சப்போ சின்னத்தம்பி அண்ணன் ராமலிங்கம் பொண்டாட்டிக்கு இரு போட்டு விடுறேன்னு சொல்லி ராத்திரி பூரம் நிக்க வச்சி... சோலிய முடிச்சாருன்னு ஊருக்குள்ள பேசுனாங்கள்ல அது இந்த மடைதானே..." சுப்ரமணி அடுத்த சுற்றை ஆரம்பித்து வைத்தான். "பேச்சு என்ன பேச்சு... அதுதானே உண்மை... தண்ணி பாச்சினதுக்கு காசு வாங்கலையாமுல்ல சின்னத்தம்பி பெரியப்பா..." "அவரு பாச்சுனதுக்கு கூலி எதுக்கு வாங்கணும்..." செல்வம் சிரிக்காமல் சொன்னான். "மூதேவி பேச்சப்பாரு... அந்தாளும் போய்ச் சேர்ந்துட்டாரு பாரு... ஊருக்குள்ள என்னா ஆட்டம் போட்டாரு..." "ம்... நாம பார்த்து வளர்ந்த மனுசங்க பலர் போயிட்டாங்க... காலம் அதன் போக்கில் நகர்ந்துக்கிட்டுத்தானே இருக்கு... இல்லையா... நாம கூட அந்த நாள நோக்கித்தானே போய்க்கிட்டு இருக்கோம்..." "ஆமாமா... போலாமா...? மழை மேகமா இருக்கு..." "ம்... போலாம்... மழைதான் வருது மழை... அட ஏன் நீ வேற... ரொம்ப வருசத்துக்குப் பின்னாடி ஒரு நல்ல மாலை... இனி எப்போ இப்படி... பார்க்கலாம் காலம் வாய்ப்புக் கொடுக்குதான்னு..." துண்டை உதறித் தோளில் போட்டபடி சொன்னான் சேகர். எல்லாரும் எழ, மடைக்குச் சற்று தள்ளி நின்ற மஞ்சநெத்தி மரத்தருக்கில் போய் நின்றபடி ஒண்ணுக்கு அடித்த முருகன், “இப்பல்லாம் இப்புடி ஒண்ணு அடிக்கக் கூட வெக்கமாயிப் போச்சு... பாத்ரூமத் தேடுறோம்...” என்றான். மகிழ்வாய் நடந்த அவர்களில் முருகனின் காதுகளுக்குள் மட்டும் 'ஊருக்கதையெல்லாம் பேசுனீங்க... லதா, ராதான்னு எல்லாம் பேசுனீங்க... ஆனா என்னைய மட்டும் மறந்துட்டீங்களே... யாருக்குமே என்னெனப்பு இல்லையா...' என்ற குரல் கேட்க, படக்கென பயத்தோடு திரும்பிப் பார்த்தான். அரையிருட்டில் கண்மாய்க்கரையில் பரந்து விரிந்து நின்ற கோராண்டி ஆயாவோட புளிய மரம் தலைவிரிகோலமாய் அதீத பயத்தைக் கொடுத்தது. அதன் ஊச்சிக் கிளையில் மங்கலாய்த் தெரிந்தாள் அப்பாவின் சொல் பொறுக்காமல் தூக்குப் போட்டுக் கொண்ட மாமா மகள் பாக்கியம். முன்னே போனவர்களை இடித்துக் கொண்டு மற்றவர்களுக்கு முன்னே வேகமாய் நடக்க ஆரம்பித்தான் முருகன். "பின்னால என்ன பேய் பிசாசா வருது... இன்னும் நீ திருந்தலைடா..." கடுப்பாய் எட்டி அவன் முதுகில் அடித்தான் சுரேஷ். முருகனுக்கு முன்னே அவளின் நினைவுகள் நடக்க ஆரம்பிக்க, வேக நடையைச் சுருக்கி மெல்லத் திரும்பி பின்னால் வந்த செல்வத்திடம் " டேய்... அந்தப் புளிய மரத்துலதானே எங்க பாக்கியம்..." என அவன் ஆரம்பித்தான். அதைக் கேட்ட பாண்டி, "அதெதுக்கு மாப்ள இப்ப... எதை எப்பப் பேசுறே..." என்று சொன்ன போது அவர்களின் நடையில் வேகம் மெல்லக் கூடியது... ஒவ்வொருவரும் முன்னாடிப் போகும் முனைப்பில் இருப்பது வேகத்தில் தெரிந்தது. காற்றின் வேகமும் கூடியது... சிறு தூறல் விழ ஆரம்பித்தது... பெருமழை பெய்வதற்கான சாத்தியக் கூறு இருப்பதாய் தெரியவில்லை என்றாலும் தூறல் மண்ணைப் புரட்டிப் போடலாம் என்றே தோன்றியது. ஒருவேளை பாக்கியம் கூட அழுதிருக்கக் கூடும் யார் கண்டா.