சினிமா

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் மோதும் தல அஜீத்

தல அஜித்தின் வலிமை திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் போட்டியிடும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றாலும், இயக்குநர் சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. மேலும், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எச். வினோத், தனது முதல் படத்திலேயே ஹெலிகாப்டர் ஷாட் அடித்து விட்டார். அடுத்ததாக நடிகர் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அவரது டீட்டெய்லிங் வேற லெவலில் பேசப்பட்டது. கடந்த ஆண்டு பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படமும் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை பெற்றுத் தந்தது. இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து 4 படங்களில் பயணம் செய்த தல அஜித், நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படம் ரீமேக் என்பதால், நிச்சயம் வினோத்தின் டீட்டெய்லிங் டச்சை வலிமை படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் தல அஜித்தின் வலிமை படம் காப் ஸ்டோரியாக உருவாகி வருகிறது. மேலும், பைக் ரேஸை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், சென்னை அருகே நடைபெற்ற ஷூட்டிங் புகைப்படங்களும், வீடியோக்களும் அதனை உறுதி செய்தன. தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மற்றும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு வலிமை படத்தை ரிலீஸ் செய்யலாம் என நினைத்து இருந்தார் நடிகர் அஜித். ஆனால், கொரோனா பரவல் காரணமாக அது முடியாமல் போக, வரும் நவம்பர் மாதம் ஷூட்டிங்கை தொடங்கி, சம்மர் 2021ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. மேலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் சிவா அஜித்தின் நண்பராக இருந்தாலும், இந்த போட்டி தவிர்க்க முடியாத போட்டியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்மரில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா மொத்தமாக வேட்டு வைத்தது. அடுத்த கோடையிலாவது பெரிய கிளாஷ் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.