சினிமா

Sadak-2 புதிய சாதனை

'சடக் 2' படத்தின் ட்ரெய்லர் வெளியான 20 மணி நேரத்துக்குள் 1.5 கோடி மக்கள் பார்த்துள்ளனர். இதில் அதிக டிஸ்-லைக்குகள் பெற்று சாதனை புரிந்துள்ளது. இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் குறித்த கருத்துகள் கடுமையாக எதிரொலித்து வருகின்றன. தொடர்ச்சியாக கரண் ஜோஹர், அலியா பட் உள்ளிட்ட பாலிவுட் வாரிசுகளைக் குறிவைத்து, தாக்கிப் பேசி வருகிறார்கள். இதனிடையே, மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள் அலியா பட், பூஜா பட் நடித்திருக்கும் 'சடக் 2' படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தது. இந்தப் படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனால் #UninstallHotstar என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தார்கள். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனிடையே, 'சடக் 2' படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஆகஸ்ட் 12) காலை வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் வெளியாகி 20 மணி நேரத்துக்குள் 4.5 மில்லியன் டிஸ்-லைக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை 4லட்சம் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் சுவாரஸியமானவை. இது தவிர கூகுள் ரிவ்யூவில் பத்தாயிரம் ரசிகர்கள் வாக்களித்து ஒரே ஒரு ஸ்டார் ரேட்டிங் கொடுத்து இருக்கிறார்கள். அங்கும் மூன்றாயிரம் பின்னூட்டங்களில் ரசிகர்கள் ஆலியாபட் மற்றும் சினிமா துறைகளில் திகழும் வாரிசு ஊக்குவிப்புகளை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் படக்குழுவினர் மட்டுமல்லாது, முன்னணி நடிகர்கள் பலரும் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால், இதுவரை வெளியான பாலிவுட் படங்களில் அதிகமான டிஸ்லைக்குகளைப் பெற்ற ட்ரெய்லர் 'சடக் 2' தான். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த விரைவில் படக்குழுவினர் பேட்டியளிக்கவுள்ளார்கள். அப்போது வாரிசு அரசியல் தொடர்பான சர்ச்சைகளுக்குப் படக்குழுவினர் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.