இலக்கியம்

நாகர் - பரிவை சே.குமார்

"என்னடா... குளிச்சிட்டு வந்ததும் எங்க போறே...?" "அம்மா... நாகர் கோயில் வரைக்கும் போயிட்டு வாரேம்மா..." "நாகர் கோவிலுக்கா... அங்க போற மாதிரி பாதயெல்லாம் இப்ப இல்ல... அது போக யாருமே போகாம அந்த இடமே முள்ளும் மொடலுமா மாறிடுச்சுன்னு சொன்னாங்க... இப்ப எல்லாருமே ரோட்டுல நின்னு அந்த தெசயப் பாத்துத்தான் சாமி கும்பிடுவாங்க... நம்ம மேலப்பன நின்னுச்சு பாரு... அதுக்கு நேர நின்னு கும்பிட்டு வா போதும்..." "என்னம்மா சொல்றே..? நாகர் கோவில் இல்லையா இப்ப... அப்ப கோழி அறுக்குறதெல்லாம்...?" "இப்ப யாரு வீட்ல கோழி இருக்கு? அறுக்குறதுக்கு... ஆடு மாடுகளே அரிதா போச்சு... கோயிலுக்குள்ள இருக்குற சாமிகளயே உருப்படியா கும்பிட மாட்டேங்கிறாங்க... இதுல கம்மாக்கரயில நாமளா வச்சிக் கும்பிட்ட சாமியத்தான் தேடிக் கும்பிடப் போறானுக" அம்மா சொல்வது உண்மைதான்... நாகருக்கு கோவில் எல்லாம் கிடையாது. கம்மாய்க்கரையில் நின்ற ஒரு ஒரம்பா மரமே நாகர் என்பதாய் இருந்தது. கிராமங்ககளில் நிறைய சிறு தெய்வங்கள் உருவமின்றி மரங்களிலும், பிடித்து வைத்த மண்ணிலும், கல்லிலுமே இருக்கும். அப்படித்தான் நாகரும்... ஒரம்பா மரத்தில் இருந்தார். அம்மா சொல்வதைப் போல ஊருக்குள்ள ஆடு, மாடு, கோழியெல்லாம் குறைஞ்சிபோச்சு. கிராமத்துத் தெய்வங்கள் எல்லாமே உணர்வுப்பூர்வமாய் மனுசனுக்கு நெருக்கமான தெய்வங்களாகவே இருக்கும். தனித்த ஐயரோ, தரிசனத்துக்காக பணம் கொடுத்து வரிசையில் நிற்பதோ, கருவறைக்குள் செல்லக்கூடாது என்ற மிரட்டலோ இல்லாமல் ஒரு வேளாரோ அல்லது உள்ளூர்க்காரரோ பூஜாரியாய் பூஜைகள் செய்வார்கள். சாமியை நாம தொட்டுக் கும்பிடலாம்... பேசலாம்... சண்டை போடலாம்... வழித்துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போகலாம். எங்க ஊர் மாரியம்மன் கோவிலில் செவ்வாய், வெள்ளி நான்தான் சாம்பிராணி போட்டிருக்கிறேன். இப்ப வெளிநாட்டு வாழ்க்கை என்பதால் மற்றொரு பையன் பார்க்கிறான். அம்மன் பீடத்தை தொட்டுக் கழுவுவதில் அலாதிப் பிரியம் எனக்கு... அதற்காகவே குடம் குடமாக அவள் மீது தண்ணீர் ஊற்றுவேன். சாமியுடனான சண்டைகளும் சமாதானமுமாய் அது ஒரு உணர்வு. அதன் வெளிப்பாடே அலாதியானது. அதை உணர்ந்தவனுக்குத்தான் தெரியும் அதன் சுகம். இரு ஊர் பிரச்சினைகளால் எங்க ஊர் கம்மாயின் வடகரையில் இடிந்து கிடக்கும் அய்யனார் கோவிலை எடுத்துக்கட்ட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருந்தாலும் ஏனோ கை கூடவில்லை. சுற்றிலும் கருவை மரங்கள் சூழ, வழிபடக் கூட செல்ல முடியாத நிலையில்தான் இப்பவும் இருக்கு... சில சமயங்களில் கருவைகள் வெட்டப்பட, பாதை கிடைப்பதுண்டு. நெருஞ்சி முள் குத்தினாலும் அய்யனாரை அருகே சென்று கும்பிட்ட நாட்கள் அலாதியானது. இப்போது சிதறு தேங்காய் கூட கருப்பர் முதுகுக்குப் பின்னே உடைக்கிறார்கள்... அதுதான் அய்யனாருக்காம்... அநாதையானது அய்யனார் மட்டுமில்ல நாகரும்தான் என்பதை அம்மா சொன்ன பின்தான் உணர்ந்தேன். சின்ன வயதில் காலையில் நாலைந்து பேர் சேர்ந்து வெளிக்கி இருக்கப் போவதுண்டு. அது என்னவோ ஊர்வலம் போல,.. கொல்லக்காட்டில் வெளிக்கி இருந்துவிட்டு வேப்பங்குச்சியோ புளியங்குச்சியோ ஒடித்து பல் விளக்கியபடி ஊர்க்கதைகள் பேசி, பார்த்த சினிமாக் கதைகள் பேசி... கம்மாயில் குண்டி கழுவி, வாய் கொப்பளித்து வீடு வந்து சேர்வதுண்டு... தண்ணீர் நிறையக் கிடக்கும் சமயத்தில் குளித்துவிட்டும் வருவதுண்டு. அப்போதெல்லாம் 'டேய் நாகர் கோவில் பக்கம் வெளிக்கி இருக்கக் கூடாதுடா'ன்னு ஒதுங்கிப் போயிருக்கோம். ஆனா சில பெருசுக அங்கிட்டு இருந்துதான் வைக்குங்க. நேர்ந்து விட்ட சேவலைப் பிடித்துக் கொண்டு ஒரு கூடையில் பூஜை சாமான்களும் கம்மாயில் தண்ணீர் இருந்தால் வாளியும் இல்லையென்றால் வாளியில் தண்ணியும் கொண்டு போய் சேவலை அறுத்து தலையை மரத்தின் அடியில் வைத்து சாமி கும்பிட்டு வருவதுண்டு. துண்டு, மாலை எல்லாம் போடுவதில்லை... ஊதுபத்தி, சாம்பிராணி, சூடம் எல்லாமே ஒரம்பா மரத்துக்குத்தான். சிலர் எப்போதேனும் கதம்பம் போட்டு சாமி கும்பிடுவதுண்டு. மாடு மேய்க்கும் போது கம்மாய்த் தண்ணிக்குள்ள கிடந்துட்டு எந்திரிச்ச எருமைங்க நாகர் வழி செல்லும் போது மரத்தில் உடம்பை உரசும். அதற்குத் தெரிவதில்லை அது நாகர் என்று. நாங்கள்தான் கத்திக் கொண்டு ஓடி விரட்டுவோம். சாமி கும்பிடப் போகும் போதெல்லாம் யாரேனும் பேண்டு வைத்த பீயைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருக்கும். அம்மாவோட போனால் அறிவுகெட்டதுக... சாமி கும்பிட வருவாகன்னு கூட இல்லாமன்னு திட்டிட்டு பாத்து வாடான்னு சொல்லும். அப்பாவோ நரகல் கிடக்குடா... மிதிச்சிடாதே என்பார். அக்காவோ சாமி இருக்கது கூடவா தெரியாது என்றபடி கொளுஞ்சியை பிடிங்கி அதைத் தள்ளிவிட்டு பாதையைச் சுத்தம் பண்ணும். மரத்தினடியில் வைக்கும் கோழியின் தலையை பாம்பு சாப்பிடும் என்பார்கள். நான் பல முறை சென்றிருக்கிறேன் பாம்பைப் பார்த்ததில்லை. ஆனா முனியய்யா கோவிலை இரவு நேரத்தில் கடக்க நேரிட்டால் உருளைக்கிழங்கு, மல்லிகைப்பூ வாசமெல்லாம் வரும்... அதை உணர்ந்திருக்கிறேன்... பயந்திருக்கிறேன். பலர் முனியய்யா பாம்பை பார்த்ததாய்ச் சொல்வார்கள். நான் பார்த்ததில்லை. "என்னடா... கெளம்புனவன் என்னமோ யோசிச்சிக்கிட்டு நிக்கிறே..?" "இல்லம்மா நாகருக்கு கோழி அறுத்ததெல்லாம் நினைச்சிப் பார்த்தேன்... அப்பவே சின்ன கோவிலா முனியய்யாவுக்கு மாதிரி கட்டியிருக்கலாம்... காலாகாலத்துக்கும் நாகர் கோவிலா இருந்திருக்கும் இல்லையா..." "எங்கேடா இருக்க சாமிகளுக்கே கட்டடம் சரியில்ல... அதை எடுத்துக் கட்ட வக்கில்ல... மரங்களில் வைத்துக் கும்பிடும் சாமியெல்லாம் இப்படித்தான் காலாகாலத்துக்கு நீடிப்பதில்ல... அடுத்த தலமொறக்கி நம்மூருல நாகர் கோவில் இருந்ததே தெரியாது. வில்லுக்கம்பு வெள்ளச்சாமின்னு ஒரு சாமி... சீதாபதியண்ணனோட கொல்லயில பனமரத்துல இருந்துச்சு... பூசயெல்லாம் போடுவாக... இப்ப பனமரமும் இல்ல... பூசயும் இல்ல... வெள்ளச்சாமி இப்ப எங்க இருக்காரோ யாருக்குத் தெரியும்..? உனக்கெல்லாம் அப்படி ஒரு சாமியிருந்ததே தெரியாதுதானே..." "ம்..." "இதுதான்டா சின்னச் சின்ன சாமியோட நெலமை... நம்ம முனியய்யாவுக்கு கோவில் கட்டுமுன்னே அவருக்குப் பின்னே ஒரு கல் இருந்துச்சு... காளியம்மன்னு சொல்லிக் கும்பிட்டாங்க... இப்ப அது எங்கே... முனியய்யாவைக் கும்பிடும்போது அத யாராச்சும் தேடுறாங்களா... இல்லயே... அப்படித்தான் நாகரும்... கொஞ்சம் கொஞ்சமா காணாமப் போயிடுவாரு... போயிடுவாரு என்ன... போயிட்டாரு..." அம்மா சொல்வதில் இருக்கும் உண்மை உரைத்தது... பெரும்பாலும் முனியய்யா கோவில்களில் கிடாப்பூஜை என்பது சாமி கும்பிடுவதுடன் முடிந்து விடும். படையல் எல்லாமே அருகிருக்கும் காளியம்மனுக்குதான் என ஒருமுறை சித்தப்பா சொல்லியிருக்கிறார். முனியய்யா சைவம்டா என்ற கூடுதல் செய்தியுடன்... அதன் பின் முனியய்யா கோவில் பூஜைகள் கூர்ந்து கவனித்திருக்கிறேன்... அசைவப் படையல் அருகிருக்கும் அம்மனுக்கே.. பெரும்பாலான முனியய்யா சைவமாத்தான் இருக்கு. "நான் நாகர் கோவில் வரைக்கும் போயிட்டு வாரேம்மா..." "அதான் இல்லேங்கிறேன்... போறேன்னுட்டு நிக்கிறே... அங்கிட்டு முள்ளும் மொடலுமாக் கிடக்கும்... கல்யாண மாப்புள... முள்ளு கிள்ளக் குத்திக்கிட்டு வந்துறாத.... அதோட இப்ப எதுக்கு அங்க போயிக்கிட்டு... பாம்பு பட்ட கிடக்குன்னு வேற சொல்றாக..." "அம்மா.. நாகர் கோவில்ல நான் நாகத்தைப் பார்த்ததே இல்லை... இன்னைக்காச்சும் பாத்துட்டு வாரேனே..." "சொன்னாக் கேளு... ரோட்டுல நின்னு கும்பிட்டு வா...." "சரி... போ முடியுதான்னு பாக்குறேன்... இல்லேன்னா ரோட்டுல நின்னு கும்பிட்டு வாரேன்... எல்லாச் சாமியையும் பாக்க முடியாம ரோட்டுல நின்னு கும்பிடுறதுல என்ன பக்தி இருக்கப் போகுது..." என்றபடி கிளம்பினேன். ராமச்சந்திர மாமாவோட இனிப்புப் புளி, தன் பசுமை இழந்திருந்தது... அதற்கும் வயதாகிவிட்டது என்பதைப் பறைசாற்றும் விதமாக நிறைய பட்டுப் போன கிளைகள் தெரிந்தன. இந்த மரத்தின் புளியம்பிஞ்சைப் பறித்து பாலத்தில் உரசி உருண்டையாக்கிச் சாப்பிட்டது நினைவில் வந்து போனது. அரைப்பழத்தின் சொல்லவொண்ணா இனிப்புக்காக மரத்தில் ஏறி கிடையாக் கிடந்ததும் ஒரு நாள் மரத்தில் ஏறிய பால்கரசு தவறி விழுந்து கையை ஒடித்துக் கொண்டதும் ஞாபகத்தில் வந்தது. ஊர் நினைவுகள் எல்லாம் எப்பவுமே இனிப்புப் புளி போல்தான்... நாவில் எச்சில் ஊறியது அது நினைவுக்காக அல்ல இனிப்புப் புளிக்காக என்பது அதன் இனிப்பில் தெரிந்தது. கம்மாய்க்கரையை நோக்கிப் போனபோது ஆளாளுக்கு ஒவ்வொரு காராஞ்செடிக்குப் பின்னால் அமர்ந்து வெளிய இருந்தது ஞாபகத்தில் ஆடியது. காராஞ்செடிகள் இன்னும் இருந்தன... அமரத்தான் இடமில்லாது முட்கள் மண்டிக்கிடந்தது. கம்மாய்க்கரை ஏறினால் ஒரே கருவை மரங்கள்... பாதையே இல்லை... மாடுகள் நுழைந்து சென்று கருவைக்காய் பொறக்கித் தின்ன பாதை மட்டுமே வழியாய், முள் உடம்பில் கிழிக்க அந்த வழியாக நாகரின் ஒரம்பா மரம் நோக்கி நடந்தேன். அருகே செல்லச் செல்ல ஆட்கள் இந்தப்பக்கம் வருவதேயில்லை என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது. மாட்டெருக்களைத் தவிர மனிதக் கழிவுகள் எதுவும் இல்லாதிருந்தது. கண்மாய்க்குள் அமர்ந்து குடித்துவிட்டு யாரோ தூக்கிப் போட்டிருந்த சரக்குப் பாட்டிலொன்று சிதறிக் கிடக்க, அதனருகே கரையான் அரித்த சிகரெட் பாக்கெட் ஒன்றும் கிடந்தது. நரி ஒன்று செத்து அழுகிப் போய் எலும்புகள் தெரியக் கிடந்தது. அதன் நாற்றம் காற்றோடு கலந்திருந்தது. சில பாம்புச் சட்டைகள் கிடந்தன. பாம்புகள் நிறைய இருக்கலாம். நான் படிக்கும் காலத்தில் நின்ற சாய்ந்த பூவரசமரம் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் மஞ்சநெத்தி ஒன்று நின்று கொண்டிருந்தது... ஆனால் அந்தப் பூவரசு மட்டுமில்லாமல் அவளும் என் மனதுக்குள் வந்தாள். அவள்...ஆம்... பெத்து மாமா மகள் லதாவும் ஞாபகத்தில் வந்தாள். இந்த இடத்தில்.. அந்த பூவரச மரத்தில் சாய்த்து வைத்துத்தான் அவளுக்கு முத்தம் கொடுத்தேன்... அதுதான் வயசுக்கு வந்த பெண்ணுக்குக் கொடுத்த முதல் முத்தம். அதன் பின் அவளை அணைத்தபடி அவள் போட்டிருந்த ஆம்பளைச் சட்டையின் பட்டை கழட்ட முயன்றேன்... அந்தச் சின்ன மார்பைப் பார்க்கும் முயற்சியில்... ஆனால் தள்ளிவிட்டு ஓடிவிட்டாள். ஆனால் பின்னொரு நாளில் யாருமற்ற வேலையில் கம்மாயில் நானும் அவளும் குளிக்கும் போது ஒரு தடவைதான் காட்டுவேன் என பயந்து பயந்து காட்டினாள்... அவள் முடியாது என மறுத்தும் வலுக்கட்டாயமாய் தொட்டுப் பார்த்ததே முதல் பெண் ஸ்பரிசம்... இப்ப அவளுக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள். போன முறை ஊருக்கு வந்தபோது என் முன்னே அவளின் இரண்டாவது பையனுக்குப் பால் கொடுத்தாள்... ஏனோ அதை மறைக்க வேண்டும் என அவளும் நினைக்கவில்லை... தொட்டுப் பார்க்க வேண்டுமென எனக்கும் ஆசையில்லை... சிரித்துக் கொண்டேன். பாதை இல்லாது முள்ளுக்குள் நுழைந்து செல்லும் போது இவ்வளவு கஷ்டப்பட்டு நாகரைப் பார்க்கப் போகணுமா என்றே தோன்றியது. வந்தது வந்தாச்சு போய்ப் பார்ப்போம் என முன்னேறினேன்... செருப்பை மீறி காலில் ஒரு முள் குத்தியது. ஒரம்பா மரம் நின்ற இடத்தில் அதன் அடிமரம் கரையான் தின்றது போக மீதம் இருந்தது. அதைச் சுற்றி காராஞ்செடியும் சூராஞ்செடியுமாக... சுத்தமில்லாது கிடந்தது. சுற்றிலும் கண்களை ஓட விட்டேன்... கம்மாய்க்குள் இருந்தும் வரமுடியாத அளவுக்கு அடைசலாய் கருவை. எப்படியிருந்த இடம்... இப்படிக் கவனிப்பாரற்று கிடக்கிறது. ஒருவேளை முத்தையா ஐயா இருந்திருந்தால் சுத்தமாக வைத்திருப்பாரோ என்னவோ..? அவர்தான் கம்மாய் வழியாக வர அடிக்கடி பாதை சுத்தம் பண்ணி வைப்பார். சுடுகாட்டில் அவரைப் புதைத்த இடம் கூட இப்போது அடையாளம் தெரியாது. ஒரு சிறு தெய்வமொன்றை இழந்திருக்கிறது அந்தக் கம்மாய்க்கரை... அந்த ஊர்... அம்மா சொன்னது போல் வெள்ளைச்சாமியைப் போல நாகரும் எங்கிருக்கிறாரோ இப்போது... கிளம்பலாம் என மீண்டும் வந்த வழி திரும்ப... உரம்பா மரத்தினருகே சரச்சரவென சத்தம்... பயத்தோடு உற்றுப் பார்த்தேன். கரையான் அரித்த வேருக்குப் பின்னே நல்ல பாம்பொன்று நெளிந்து கொண்டிருந்தது. நாகரைப் பார்த்ததே இல்லை என்ற நான் அன்று முதன் முதலில் அவரை அங்கு பார்த்தேன். அது என்னைப் பார்த்துப் பயப்படவில்லை என்பது அதன் போக்கில் தெரிந்தது. அப்பா ஒருமுறை முனியய்யாவைக் கும்பிடும் போது வேலில் நல்ல பாம்பு தொங்கிக்கிட்டு இருந்தது என்று சொல்லியிருக்கிறார். சாமி பாம்புகள் எப்போதும் தொந்தரவு கொடுப்பதில்லை என்பதே உண்மை. அது தலை தூக்கிப் பார்த்தது. நாகர் இடம் பெயரவில்லை... அவருக்கான இடமில்லாது இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். மீண்டும் நடக்கலானேன். பூவரச மரம் இருந்த இடம் கடக்கும் போது லதா ஞாபகத்தில் வரவில்லை... அதற்குப் பதிலாக மனமெல்லாம் நாகர் நிறைந்திருந்தார். மீண்டும் அந்த இடத்தில் நாகருக்கான கோவில் கட்டும் ஆசை துளிர் விட்டது.