சென்னை பெரம்பூரில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊரவலம் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் 20 கி.மீ தூரத்தை கடந்து நள்ளிரவு 12.10 மணியளவில் அடக்கம் செய்யும் இடத்தை அடைந்தது. வழி நெடுகிலும் தொண்டர்கள் மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதிகாலை 4 மணி அளவில் அவரின் உடல் இதையடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டும். புத்தமுறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி உட்பட 8 பேர் சிறையில் கைது செய்து அடைக்கப்படுள்ளனர். மேலும் 3 பேரை பிடித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தின் வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதித்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று அவரது குடும்பத்தினரும், கட்சி நிர்வாகிகளும் திடீர் போராட்டத்தில் குதித்தனர். உயர் போலீஸ் அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டு அவரது மனைவி பொற்கொடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், ஆமஸ்ட்ராங் உடலை அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு 9.40 மணி அளவில் பெற்றுக்கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. உடலுக்கு குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின்னர் அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக பெரம்பூர் பந்தன் கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்துக்கு எடுத்து வரப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, இதில் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் இருந்து நேற்று மாலை 4 மணி அளவில் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றுவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியது.
ஆம்ஸ்ட்ராங் உடல் மாலை 4.30 மணி அளவில் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு மாதவரம், புழல், செங்குன்றம் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. வழி நெடுக மக்கள் அஞ்சலி செலுத்தினர். 20 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த இடத்திற்கு 8 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூர் கொண்டு வரப்பட்டது.
பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அங்கு இறுதி சடங்குகளுக்கு பிறகு ஆம்ஸ்ட்ராங்க் உடல் அடக்கம் செய்யப்பட்டது.