பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 411 இடங்களை கைப்பற்றி உள்ளது. தோல்விக்குப் பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் ரிஷி சுனக் விலகியுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 131 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், இடதுசாரியான தொழிலாளர் கட்சி 410 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 இடங்களில் வென்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 411 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. மற்றொரு முக்கிய கட்சியான லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி 71 இடங்களில் வென்றுள்ளது. பிரிட்டனில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தொழிலாளர் கட்சி 411 இடங்களை கைப்பற்றி உள்ளதால், புதிய பிரதமராக அக்கட்சியை சேர்ந்த Keir Starmer தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்நிலையில், தோல்விக்குப் பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். விரைவில் மன்னர் சார்லசை சந்தித்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் இங்கிலாந்து வாழ் தமிழரான உமா குமரன் வெற்றி பெற்று எம்.பி.,யாகி உள்ளார். லண்டனில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், 44 சதவீத வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் வேட்பாளரை வீழ்த்தி உள்ளார்.