முசாபர்பூருக்கு அடுத்து பிகாரின் சியோஹர் மாவட்டத்தில் இந்துகளுக்கு எதிராக மக்களவையில் பேசியதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார்தராரான நிதிஸ்குமார் கிரி, குறிப்பிட சமூகத்தின் நம்பிக்கைகளை அவதூறு செய்யும் வகையில் ராகுல் காந்தி நடந்து கொண்டதாகவும் ஹிந்துகளுக்கு எதிராக அவர் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரத நியாய சஹிதா (பிஎன்எஸ்) சட்டப் பிரிவு 299 மற்றும் 302-ன் கீழ் சியோஹர் நீதிமன்றத்தில் ராகுல் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ளது.
நிதிஸ்குமார் கிரி சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர் பிரபாசங்கர் சிங், புகார்தரார் அந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.
ஹிந்துகள் மற்றும் சனாதன தர்மம் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் அவதூறு செய்யும் வகையில் பேசியதை தொலைக்காட்சியில் புகார்தாரர் பார்த்ததாகவும் ராகுல் காந்தி ஹிந்து கடவுளின் புகைப்படத்தை அநாகரீகமாக காண்பித்ததாகவும் இதனால் புகார்தாரர் கடுமையான மன வருத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் வழக்குரைஞர் தெரிவித்தார்.
இதே நிகழ்வுக்காக முசாபர்பூரில் புதன்கிழமை ராகுல் காந்தி மீது வழக்குப் பதியப்பட்டது. திவ்யன்சு கிஷோர் என்பவர் பதிவு செய்த அந்த வழக்கின் விசாரணை ஜூலை 15-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.