செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம் - 30% மெத்தனால் கலப்பு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். 

அதில், சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் ஆட்சியர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்று நடவடிக்கை எடுத்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறையினர் உடனே விசாரணை நடத்த ஆட்சியர் ஆணையிட்டார்.

பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், உதயநிதி நேரில் சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிவாரண நடவடிக்கை மேற்கொண்டனர். விஷச் சாராய புகார்கள் தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு வாட்ஸ்அப் குழுக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மெத்தனால் கண்காணிக்கபடுகிறது. கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்றது. அவ்வப்போது திடீர் சோதனைகள் நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து வருவதாகவும். சட்டமன்றத்தில் விவாதிக்க கோரிய சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளை சபாநாயகர் ஏற்கவில்லை. மாநில அரசு இந்த சம்பவம் குறித்து கவனமாக விசாரித்து வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கி உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநில காவல் துறை விசாரித்து வரும் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை எனவும் சில அரிதான அல்லது விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரணை பேர் முடியும். இந்த வழக்கில் 10 மேற்பட்ட நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்று இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் விசாரணை சரியான முறையில் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வந்திருப்பதாகவும் கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை அதிகரித்து இருப்பதாகவும், இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு இதுவரை 65 பேர் மரணம் அடைந்துள்ளனர் 145 சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

விசாரணை முறையாக நடைபெற்று வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதை ஏற்று கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூலை 11 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.